தமிழ்நாடு

பின்னலாடை நகரில் பெருகி வரும் தற்கொலைகள்

திருப்பூர் :  பின்னலாடை உற்பத்தியின் மூலம் அன்னியச் செலாவணியை அதிகளவில் ஈட்டி வரும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தற்போது தற்கொலைகள் பெருகி வருகின்றன.  கடன் தொல்லை, குடும்ப உறவுகளில் விர

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர் :  பின்னலாடை உற்பத்தியின் மூலம் அன்னியச் செலாவணியை அதிகளவில் ஈட்டி வரும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தற்போது தற்கொலைகள் பெருகி வருகின்றன.

 கடன் தொல்லை, குடும்ப உறவுகளில் விரிசல், கலாசார சீரழிவுகளால் அதிகரித்து வரும் இத் தற்கொலைகளை தடுக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

÷ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி, உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி என பின்னலாடை உற்பத்தி தொழில் மூலம் பெருமளவில் வருவாயைக் குவித்து வரும் திருப்பூர் மாவட்டம் தற்கொலைகளிலும் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் இம்மாவட்டத்தில் 491 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 307, பெண்கள் 165, மாணவியர் 13, மாணவர்கள் 8 பேர் அடங்குவர்.

சராசரியாக 50 தற்கொலைகள்...: இதேபோல், நடப்பாண்டில் கடந்த ஜூன் வரையிலும் 302 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 183, பெண்கள் 99, மாணவிகள் 14, மாணவர்கள் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி, சராசரியாக மாதம் 40 முதல் 50 தற்கொலைகள் நடைபெறுகின்றன. இது போன்று தற்கொலை செய்யவர்களில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்றும், குறிப்பாக ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் மாவட்ட காவல் துறை சார்பில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ÷மேலும், இதுபோன்று தற்கொலை செய்து கொள்பவர்கள் தூக்கு போடுதல், விஷம் குடித்தல், சாணிப்பவுடர் உள்ளிட்டவற்றையே அதிகளவில் பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

÷இதுபோன்ற தற்கொலைகளுக்கான காரணம் குறித்து சேவ் தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் ஆ.அலோசியஸ் கூறுகையில், தொழில் வளமுள்ள இம்மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான குடும்பங்கள் பிழைப்பு தேடி வந்து கொண்டுள்ளன. அதில், குறிப்பிடும்படியாக தென் மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமப்புற குடும்பத்தினரே அதிகம்.

கந்து வட்டிக் கொடுமை...: அவ்வாறு, திருப்பூர் நிறுவனங்களில் அவர்கள் இரவு, பகலாக உழைத்துச் சம்பாதித்தாலும் ஈடுகட்டமுடியாத செலவுகளும் இங்கே உள்ளன. ஏற்கெனவே, பல்வேறு கடன் சுமைகளில் திருப்பூர் வந்து வேலை பார்க்கும் அவர்களால் இந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் தோல்வி நிலையை அடைகின்றனர். இதன் விளைவு கந்து வட்டிக் கொடுமை, குடும்பத்தில் விரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி இறுதியில் தற்கொலை முடிவு எடுக்கின்றனர்.

÷இது போன்ற தற்கொலைகளை தடுக்க திருப்பூரில் நிரந்தரமாக மனநல ஆலோசனை மையங்கள் துவங்கி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர, அயல்நாடுகளில் உள்ளதுபோல் ஹெலப் லைன் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தி தற்கொலை நிலையில் உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கலாம் என்றார்.

அதிகரிக்கும் கள்ளத் தொடர்புகள்...: பெருகி வரும் தற்கொலைகள் குறித்து ஆராய மாவட்ட நிர்வாகம் சார்பில் சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின்பிலிப், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

÷இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக் மேற்கொண்ட ஆய்வில், பெருகியுள்ள கள்ளத் தொடர்புகள், வறுமை, குடும்ப

உறுப்பினர்களிடையே விட்டுப்போன அன்பு பறிமாற்றம் போன்றவையே தற்கொலைகள் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தை குறைக்க...: தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க காவல்துறை சார்பில் வாரந்தோறும் சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டன. அம்முகாம்கள் கடந்த பல மாதங்களாக நடத்தப்படுவதில்லை. இப்பிரச்னையின் வீரியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் தற்கொலைகள் தடுப்பு மனநல ஆலோசனை மையங்கள் துவக்கி செயல்படுத்த வேண்டும்.

÷தவிர, தொழிலாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் தொழில் நிறுவ னங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

 மேலும், தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை நல்வழியில் செலவிட்டு மனஅமைதியை ஏற்படுத்திக்கொள்ள திருப்பூர் மாவட்டத்தில்

ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களை கூடுதலாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்பது சமூகநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT