தமிழ்நாடு

காற்றில் பறக்கவிடப்படும் கட்டட விதிமுறைகள்!

கோவை : பெரு நகரங்களைத் தொடர்ந்து கட்டட விதிமீறல்கள் என்பது பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளுக்கும் வந்துவிட்டது.  ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே கட்டட விதிமுறைகளை சீர்தூக்கிப் பார்த்து சம்பந்தப்பட்ட

சிவ. மணிகண்டன்

கோவை : பெரு நகரங்களைத் தொடர்ந்து கட்டட விதிமீறல்கள் என்பது பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளுக்கும் வந்துவிட்டது.  ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே கட்டட விதிமுறைகளை சீர்தூக்கிப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், மற்ற நேரங்களில் அதைப் பற்றிக் கண்டுகொள்வதில்லை.

அதிகார வரம்புக்கு மீறி உள்ளாட்சி அமைப்புகள் கட்டட அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது கட்டட அனுமதி அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாக நகர்ப்புற

வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இது எத்தகைய பலனை அளிக்கப் போகிறது என்று பொதுநல அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.

உள்ளூர் திட்டக் குழுமத்தைச் சார்ந்த பகுதிகளில் 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் அனுமதி

பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கு வழிவகைகள் உண்டு.

ஆனால், அரசின் விதிமுறைகளில் இருந்து மீறுவதற்காக பல்வேறு முறைகேடுகளைச் செய்து கட்டட அனுமதி பெற்று விடுகின்றனர்.

 மாநகரப் பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்கள், வணிக வளாகங்கள் விதிமீறல்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது புறநகரப் பகுதிகளிலும் கட்டட விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கோவையையொட்டி வடவள்ளி பேரூராட்சி, குறிச்சி மூன்றாம் நிலை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்படும் வணிக வளாகங்களில் விதிமீறல்கள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

நகரின் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், குடியிருப்புக்காக மக்கள் தற்போது புறநகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கோவை மாநகரைச் சுற்றிலும் சுமார் 20 கிமீ சுற்றளவுக்கு உள்பட்ட உள்ளாட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது மக்கள் தொகை இருமடங்கு அதிகரித்துள்ளது. நகரின் நிலமதிப்பு உயர்ந்துவிட்ட நிலையில் வீடுகள் வாங்குவோர் புறநகரப் பகுதிகளை நோக்கிச் செல்லத் துவங்கிவிட்டனர். இதனால் புறநகரப் பகுதிகளில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் அதிகரித்துவருகின்றன. கட்டட விதிமீறல்களுக்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

இதுவரை பேரூராட்சிகளில் 1000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட வணிகக்  கட்டடங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என விதிமுறை இருந்தது. இருப்பினும் 10 ஆயிரம் சதுர அடி வரை உள்ள ஒரே கட்டடத்துக்கு பேரூராட்சிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டடங்களை ஆயிரம், ஆயிரம் சதுர அடிகளாகப் பிரித்து அனுமதி அளிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனால் மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி பேரூராட்சி, ஊராட்சிகளிலும் கட்டட விதிமீறில்கள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு

பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாக, வணிக வளாகங்கள் எதிலும் வாகன நிறுத்தும் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை. இந்த விதிமீறல்களால் நகரப் பகுதிகள் பெரும் நெரிசலைச் சந்தித்து வருகின்றன. அடுத்து 10 ஆண்டுகளில் புறநகர்ப் பகுதிகளிலும் வளர்ச்சியை அடையக்கூடிய சூழலில் அங்கும் நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

"கட்டட விதிமீறல்களைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அதைத் தவிர்த்து கட்டட அனுமதிக்கான அதிகார வரம்பை உயர்த்துவதில் முழுமையான பலன்

கிடைக்கப் போவதில்லை' என்கிறார் கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் நுகர்வோர் அமைப்பின் செயலர் கே.கதிர்மதியோன்.

 கோவையையொட்டி பேரூராட்சிகளால் அனுமதி அளிக்கப்பட்ட பெரும்பாலான வணிகக் கட்டடங்களில் விதிமீறல்கள் இருக்கின்றன. எதிலும் வாகன நிறுத்தும் இடங்கள் கிடையாது. உதாரணமாக வடவள்ளி பேரூராட்சிப் பகுதியில் உள்ள வணிகக்  கட்டடங்கள், பேரூராட்சி வரைமுறைக்கு மேற்பட்ட பரப்பில் கட்டப்பட்டிருந்தாலும் அவை பேரூராட்சியால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நகரங்களையொட்டிய பேரூராட்சிகளில் இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றார்.

ஏற்கெனவே அதிகார வரம்புகளைக் கணக்கில் கொள்ளாமல் கட்டட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அதிகார வரம்பை அதாவது, 2 ஆயிரம் சதுர அடிவரை

அந்தந்த உள்ளாட்சிகளிலேயே அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பினால் பயன் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. கட்டட விதிமீறல்கள் குறித்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தாவிட்டால், போக்குவரத்து நெரிசல், விதிமீறிய கட்டடங்களால் ஏற்படும் அசம்பாவிதங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முடியாததாகிவிடும். அரசு இதில் கவனம் செலுத்துவது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT