முகப்பு
தமிழ்நாடு

தமிழக, கேரள வாக்காளர் பட்டியலில் பெயர்கள்: வீணாகும் தமிழக ரேஷன்,கலர் டிவி!

பொள்ளாச்சி : தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரசி  கடத்தப்படுவது ஒருபுறமிருக்க, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்து ரேஷன் கார்டுகளைப் பெற்றுக்கொண்டு தமிழக அரசு வழங்கும் இலவச கலர் டிவி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:23 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:18 PM

பொள்ளாச்சி : தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரசி  கடத்தப்படுவது ஒருபுறமிருக்க, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்து ரேஷன் கார்டுகளைப் பெற்றுக்கொண்டு தமிழக அரசு வழங்கும் இலவச கலர் டிவி உள்ளிட்ட பல்வேறு பயன்களை அனுபவிக்கின்றனர் கேரளத்தை சேர்ந்த பலர்.

  தமிழக எல்லையோரத்தில் பொள்ளாச்சி பகுதியில் கோபாலபுரம், மீனாட்சிபுரம், கணபதிபாளையம், நெடும்பாறை, நாகூர், நடுப்புணி மற்றும் கோவிந்தாபுரம் ஆகிய கிராமங்கள் தமிழக எல்லைக்குள் உள்ளன.

 தமிழக எல்லையோரத்தில் கேரளப் பகுதியில் வண்ணாமடை, எருத்தேன்பதி, கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

Advertisement

 தமிழகப் பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் சார்பில் இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவச அடுப்பு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு முதியோர் ஓய்வூதியம், இலவச வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படுகின்றன.

 இதனால் கேரளப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு விண்ணப்பித்துத் தமிழகத்தில் ரேஷன் கார்டுகளைப் பெற்றுப் பலன்களை அனுபவிக்கின்றனர்.

 பொள்ளாச்சிப் பகுதியில் ரூ.5000-க்கு ரேஷன் கார்டுகள் கிடைப்பதாகத் தெரிகிறது. இவர்களில் பலரது பெயர்கள் இரு மாநிலங்களிலும் உள்ள வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன.

 ஆனால், உண்மையாக விண்ணப்பிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவதில்லை. இதனால் ஒவ்வொரு வாக்குப் பதிவின்போதும் பிரச்னைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

 கேரள மாநிலம் சித்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் பட்டியலில்  எருத்தேன்பதியை சேர்ந்த சிலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களது பெயர்கள்  தமிழகத்தின் பொள்ளாச்சி சட்டப்பேரவையில் ராமபட்டணம் ஊராட்சிக்கு உள்பட்ட கோபாலபுரம் பகுதி வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

 இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. அப்போதைய பொள்ளாச்சி சார் ஆட்சியராக இருந்த டி.என்.வெங்கடேசுக்கு, தேர்தல் ஆணையம் இரு மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது. ஆனால் இதற்கான எவ்வித முயற்சிகளையும் வருவாய்த்துறையினர் எடுக்கவில்லை. இரு மாநில வாக்காளர் பட்டியலிலும் நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதை பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சுட்டிக் காட்டி வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்தப் பிரச்னைக்கு அரசு தீர்வு கண்டால் மட்டுமே தமிழக நிதி வீணாவதைத் தவிர்க்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.