முகப்பு
தமிழ்நாடு

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்ப் பங்கீடு முறையாக திட்டமிடப்படுமா?

திருவாரூர்:  மேட்டூர் அணை புதன்கிழமை திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை முழு அளவில் மேற்கொள்ள பாசன நீர்ப் பங்கீட்டை முறையாகத் திட்டமிட வேண்டும் என விவசாயிகள் எதிர்ப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:39 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:24 PM

திருவாரூர்:  மேட்டூர் அணை புதன்கிழமை திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை முழு அளவில் மேற்கொள்ள பாசன நீர்ப் பங்கீட்டை முறையாகத் திட்டமிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

     தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால், அன்றைய தினத்தில் அணை திறக்கப்படவில்லை. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேலும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடிக்கு மேலும் இருந்தால்தான் அணை திறக்கும் வாய்ப்பு உள்ளது என முன்பு கூறப்பட்டது.

    இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 82.50 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 4,445 கன அடியாகவும் இருந்த நிலையில், புதன்கிழமை மேட்டூர் அணை ஆடிப்பெருக்கு விழா மற்றும் பாசனத்துக்கென திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பாசனத்துக்கென திறக்கப்படவுள்ளது.

Advertisement

     ஏற்கெனவே போதிய தண்ணீர் இல்லாமல் அணை திறக்கப்படாததால், நிகழாண்டில் குறுவை சாகுபடி இயல்பான பரப்பிலிருந்து குறைந்து, ஏறத்தாழ 40 சதவீதம் அளவுக்கே நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக, சம்பா நெல் சாகுபடி வழக்கமான சாகுபடி பரப்பை விட 20 சதவீதம் அளவுக்கு கூடுதல் பரப்பில் நடைபெற வாய்ப்புள்ளது என்கின்றனர் வேளாண் துறையினர்.

    காவிரி, வெண்ணாறு பாசனப் பகுதியில் 36 ஆறுகள், 1,505 ஏ பிரிவு வாய்க்கால்கள் உள்ளிட்ட ஏறத்தாழ, 28,000 வாய்க்கால்கள் உள்ளன. இதில் நகர்ப் பகுதிகளிலிருந்து பிரியும் பெரும்பாலான ஏ பிரிவு வாய்க்கால்கள் நகர விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக தூர்ந்து, பாசனமின்றி உள்ளன. அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாலும் ஆறுகள் பள்ளமாகி, ஏறத்தாழ 40 சதவீத வாய்க்கால்களில் தண்ணீர் ஏறிப் பாயவில்லை.

      அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழை, வெள்ளம் ஆகியவற்றிலிருந்து சம்பா பயிர்களைக் காப்பாற்ற, அப்போது பயிர்கள் 3 அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்திருக்க வேண்டும். அதற்கு 150 நாள்களுக்கு மேலான வயதுடைய நீண்டகால பயிர் ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து, வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் நடவுப் பணிகளை முடித்திருக்க வேண்டும். அப்போதுதான், பெருமழை, வெள்ளத்தில் தண்ணீர் தேங்கினாலும், பயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கின்றனர் விவரமறிந்த விவசாயிகள்.

     சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள பொதுப் பணித் துறை, வேளாண் துறை, வருவாய்த் துறை இணைந்து திட்டமிட வேண்டியது மிகவும் அவசியமானது என்கிறார் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

    டெல்டா பகுதியில் உள்ள 12 லட்சம் ஏக்கரில் ஏறத்தாழ 4 முதல் 6 லட்சம் ஏக்கர் வரை, பலத்த மழையின்போது 3 அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கும் பள்ளமான இடங்களாக உள்ளன. எனவே, இந்தப் பகுதிகளுக்காவது தண்ணீர் முன்னதாகச் சென்று சேர பொதுப் பணித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

     இதற்கு முன்னதாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள், பொதுப் பணித் துறை, வேளாண் துறை உயரதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டி, நீர் பங்கீடு குறித்து விரிவாகத் திட்டமிட வேண்டும் என்றார்.

   டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்தின் தன்மை, பூகோள அமைப்பு ஆகியவற்றை தொடர்புடைய மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்கின்றனர் விவசாயிகள்.

    விதைகள், உரம், இடுபொருள்கள் விநியோகத்தைச் சீராக்கவும், விவசாயிகளுக்கு பயிர்க் கடனை தாமதமின்றி வழங்கவும் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

÷கடந்த சில ஆண்டுகளாக பொதுப் பணித் துறையின் நீர்ப் பங்கீடு முறையாக நடைபெறவில்லை எனப் பரவலான புகார்கள் உள்ளன. நிகழாண்டில், சம்பா சாகுபடி டெல்டா பகுதியில் முழுமையாக நடைபெற நீர் பங்கீடும், வேளாண் துறையின் பயனுள்ள ஆலோசனைகளுமே வழிவகுக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. எனவே, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொடர்புடைய துறைகள் உரிய முறையில் திட்டமிட்டு, டெல்டா பகுதியில் உணவு உற்பத்தியை உத்தரவாதப்படுத்துவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.