தகவல் கேட்டதற்கு தண்டனையா?
ஆலங்குளம் : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விளக்கம் கேட்போர், தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்னைகளில் இருந்து அவர்களைக் காக்க போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளத
ஆலங்குளம் : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விளக்கம் கேட்போர், தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்னைகளில் இருந்து அவர்களைக் காக்க போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் காவல்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் தமது குழந்தைகளைப் படிக்கவைக்கும் ஒருவர், அந்த பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவர் மிரட்டப்பட்டதாகவும் அவரது மனைவியிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி உள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகாரை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரும் இந்தப் புகாரை மறுத்துள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட அந்த நபர் கூறியதாவது:
கல்விக் கட்டணம் அதிகமாக வாங்குவது தெரிந்தால், பெற்றோர்கள் மெட்ரிக் ஆய்வாளரிடம் முறையிடலாம் என, கைபேசி எண்ணுடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் நான் கைபேசி மூலம் ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டபோது, பெயர் மற்றும் முழு விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனக் கூறியதன் அடிப்படையில், அவருக்குக் கடிதம் அனுப்பினேன். ஆனால், இந்தக் கடிதம் குறித்த விவரம் அவரிடம் இருந்து உடனே பள்ளிக்கு சென்றுவிட்டது.
பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கடிதம் கொடுத்ததற்காக நிர்வாகத்தினர் என்னைக் கடிந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டபோது முழுமையான பதில் கிடைக்காததால், மெட்ரிக் ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டேன். அவரோ, இந்தப் பள்ளி பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே, எதற்கு பிரச்னை செய்கிறீர்கள் என்றார்.
இந்தப் பள்ளியில் என் குழந்தைகளுக்கு வரும் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும், வலியுறுத்திக் கேட்டால் என்னிடம் மன்னிப்புக் கடிதம் பெற்றுக்கொண்டு சேருங்கள் எனவும் பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் தெரிவித்ததாக, பள்ளி நிர்வாகத்தினர் எனக்கு தெரிவித்தனர்.
நான் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க மறுத்ததால், தற்போது என் மனைவியிடம் எழுதி வாங்கி, என் குழந்தைகளை அடுத்த வகுப்புக்குச் சேர்த்துள்ளனர். மேலும் எங்களுக்கு அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்தால், காவல் நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்து உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம். எங்களுக்கு ஆதரவாக எழுதித் தர பல பெற்றோர்கள் உள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடருவோம் என்றும் என்னை மிரட்டினர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டதற்காக எனக்கு தண்டனை என்றால், இனி எந்த துறையிலும் எவருக்கும் விளக்கம் கேட்க எப்படி தைரியம் வரும்?
சம்பந்தபட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு என் மனைவியிடம் எழுதி வாங்கிய மன்னிப்புக் கடிதத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து ஆலங்குளத்தை சேர்ந்த சமூகநல ஆர்வலர் மேஜர் ரவிக்குமார் கூறியது:
தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான் சாமானிய மக்களும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் மூலமந்திரம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விவரம் கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, பெற்றோரை பழிவாங்கக் கூடாது.
இது சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல். இது குறித்து அரசு துறைவாரியாக நடவடிக்கை எடுப்பதோடு,எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதத்தையும் திரும்ப வழங்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்றார் அவர்.
அதிகாரி விளக்கம்: இது குறித்து, மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பரிமளத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, நீங்கள் குறிப்பிட்ட பள்ளியில் இருந்து ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார்.
முறையீடு செய்த அந்த நபர் பள்ளி வளாகத்திற்குள் சென்று, விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் நடந்துகொண்டு, பள்ளிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில் மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்த பின்பு பள்ளியில் சேர்க்க அனுமதியுங்கள் என கூறியிருந்தேன். மற்றபடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டதற்காக அல்ல என்றார் அவர்.
பள்ளி நிர்வாகம் மறுப்பு: இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் கூறியது:
நீங்கள் குறிப்பிடும் நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் முறையாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடமோ, அவர் மனைவியிடமோ எந்தவித மன்னிப்புக் கடிதமும் எழுதி வாங்கவில்லை. போலீஸில் புகார் செய்வோம் என்று மிரட்டியதாகக் கூறியது அப்பட்டமான பொய்.
அவர் பள்ளி வளாகத்தில், பொருள்கள் விற்பனை செய்யும் வகையில் வியாபார நோக்கோடு செயல்பட்டதை மட்டுமே அனுமதிக்கவில்லை என்றனர்.