முகப்பு
தமிழ்நாடு

தொழில்கல்விக்கான கலந்தாய்வின்போது முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் ஏற்கப்படுமா?

ஆலங்குடி: தமிழக அரசு அறிவித்துள்ள முதல் பட்டதாரி (முதல் தலைமுறை) மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து திட்டத்துக்கான சான்றிதழை, தொழில்கல்வி கலந்தாய்வின் போது ஏற்றுக்கொள்ள வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விட

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:15 PM
பகிர்:

ஆலங்குடி: தமிழக அரசு அறிவித்துள்ள முதல் பட்டதாரி (முதல் தலைமுறை) மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து திட்டத்துக்கான சான்றிதழை, தொழில்கல்வி கலந்தாய்வின் போது ஏற்றுக்கொள்ள வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கிராமங்களில் மிகவும் குறைவாக இருந்தது. இந்தப் படிப்புகள் மீதான ஆர்வமும், அதற்கான மதிப்பெண்களும் இருந்தாலும்கூட, நிதி நிலை காரணமாக பெரும்பாலானோருக்கு இப் படிப்புகள் எட்டாக்கனியாக இருந்தன.

  இந்நிலையில், முதல் பட்டதாரி மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை நிகழாண்டு முதல் சாதி மற்றும் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல், அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக அரசு ஜனவரி 6-ல் அறிவித்தது.

  அதன்படி, நிகழாண்டு தொழில்நுட்பக் கல்வி படிப்பதற்கு விண்ணப்பிக்க மே 31 கடைசித் தேதியாக அறிவித்து, விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பத்துடன் முதல் பட்டதாரி திட்டத்தில் படிக்க, வருவாய்த் துறையிடம் முதல் பட்டதாரிக்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

  ஆனால், பலர் இந்தச் சான்றிதழை இணைக்க முடியவில்லை. அதற்கான சான்றிதழை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று அனுப்புவதற்கு போதிய கால அவகாசம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே, தொழில்கல்வி கலந்தாய்வின்போது அந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இதுகுறித்து ஐஎஸ்இடி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலங்குடி கே. செந்தில்ராஜா கூறியது:

  பள்ளிச் சான்றிதழ்கள் மே 26 முதலே வழங்கப்பட்டன. மே 27-ல் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் இந்தச் சான்றிதழ்களைப் பதியும் பணி இருந்தது.  தொலைவில் இருப்பவர்கள் மே 29-ம் தேதி விண்ணப்பத்தை அனுப்பினால்தான் உரிய காலத்தில் சென்றடையும், இல்லையெனில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால், முதல் பட்டதாரி சான்றிதழைப் பெற அதற்கான விண்ணப்பத்துடன், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வட்டாட்சியரிடம் கொடுக்கும் மனுவை வருவாய் ஆய்வாளர், விஏஓ ஆகியோர் விசாரணைக்குப் பிறகு குறைந்தது 5 நாள்களுக்குப் பின்னர்தான் அந்தச் சான்றிதழ் கிடைக்கும்.

  பள்ளிச் சான்றிதழ்கள் மே 26-ல் வழங்கப்பட்டதால் அதற்கு முன்னதாகவும் இந்தச் சான்றிதழைப் பெற வழியில்லை. மே 29, 30 விடுமுறை நாள்கள் என்பதால், இருக்கும் ஒரு நாளில் இந்த வேலையை முடிக்க முடியாது என்பதால், முதல் பட்டதாரிக்கான சான்றிதழை இணைக்க முடியாமல் விண்ணப்பத்தை மட்டுமே அனுப்பியுள்ளனர்.

  இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுத்து தொழில்நுட்பக் கல்விக்கான சான்றிதழை கலந்தாய்வின்போது மாணவர்கள் அளிப்பதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என்றார் அவர். இதுவே அனைத்து மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →