கோவை, ஜூன் 27: பல நூற்றாண்டுகளைக் கடந்து, என்றும் தமிழ்க் கவிதை வாழும் என்றார் கவிஞர் வைரமுத்து.
தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சார்பாக எதிர்காலத் தமிழ்க் கவிதை என்னும் பொழிவரங்கத்தை வைரமுத்து தலைமை தாங்கி நெறிப்படுத்தினார். தலைமையுரையில் அவர் பேசியதாவது:
பல்பொருள் அங்காடி என்னும் கலாசாரம் கவிதைக்கு வந்துவிட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் எதை உள்வாங்கிக் கொண்டிருக்கிறதோ அதுதான் எதிர்காலத் தமிழ்க் கவிதையின் அடையாளம். இரண்டாயிரம் ஆண்டுகளாக எதைத் தமிழ் நிராகரித்ததோ அதுவும் எதிர்காலத் தமிழின் அடையாளம். எதிர்காலத்தில் தமிழன் இருப்பான், தமிழ்க் கவிதை இருக்குமா என்பதற்கான பதிலை இந்தப் பொழிவரங்கம் சொல்லும் என்றார்.
பேராசிரியர் செல்லப்பன் தனது உரையில், "கடந்தகாலம் தான் எதிர்காலத்தை உருவாக்கும். இன்றைய கவிதையை வைத்துதான் நாளைய கவிதையை கணிக்கவேண்டும். மரபு, புதுக்கவிதை எழுதும் இரண்டு வகைக் கவிஞர்களும் வேண்டும்.
மரணம் எனக்கு ஒருபோதுமில்லை...- என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை, காலம் கடந்தும் நிற்கும். எதிர்காலத்தில் வாழ்க்கையின் உணர்ச்சிகளை உணர்த்தும் மந்திரக் கவிதைகள், எதிர்காலத் தமிழ்க் கவிதைகளாக இருக்கும்' என்றார்.
அடுத்து பேசிய சிற்பி பாலசுப்பிரமணியம், "நமக்கு 2000 ஆண்டுகள் பாரம்பரியப் பெருமை இருக்கிறது. அதுவே சுமையாகவும் இருக்கிறது. சிறகை விரித்துப் பறக்க நினைக்கும் போது, இந்த மண் நம்மை இழுக்கிறது.
காலம்தோறும் பல மாற்றங்களுக்கு உள்பட்டே கவிதை வாழ்ந்து கொண்டிருக்கிறது. புதுப்பித்துக் கொண்டே இருப்பதில் தான் கவிதை நீடிக்கும். தொன்மை உணர்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் கவிதைகள் எதிர்காலத்திலும் வாழும்' என்றார்.
தொடர்ந்து பேசிய க.பஞ்சாங்கம், "புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளின் கவிதைகள், இன்றைக்கு சுய பச்சாதாபத்தை தூக்கிப் பிடிக்கும் தலித் இலக்கியங்கள் நாளை அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்தைப் பற்றிய பதிவாக மாறும்போதும், பெண்ணிய மொழிகள் பேசும் உணர்ச்சிக் கவிதைகளும் எதிர்காலத்தில் தமிழ்க் கவிதையை முன்னெடுத்துச் செல்லும். குறிப்பாக நுகர்வுப் பொருளாக கவிதையை மாற்றி வரும் ஊடகத்தை எதிர்க்கும் திராணியை தமிழ்க் கவிதை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
நிறைவுரை ஆற்றிய வைரமுத்து, இரண்டு அபாயங்களிலிருந்து மீளும் உபாயத்தைத் தெரிந்து கொண்டால் தமிழ்க் கவிதை எதிர்காலத்தில் செழிக்கும். ஒன்று, தீவிரவாதம். இதை எதிர்க்கும் உபாயத்தை, கம்பனிடமிருந்து எதிர்காலத் தமிழ்க் கவிதை உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது, சுற்றுச்சூழல். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டதுதான் நமது வாழ்வியல் முறை. இதை எதிர்காலத் தமிழ்க் கவிதை கருப்பொருளாகக் கொள்ளவேண்டும்.
எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்க் கவிதை வாழும். எந்த வடிவத்தில், எந்தத் தடத்தில் என்பதை காலம்தான் முடிவு செய்யும். மனிதனுக்கு உணர்த்த வேண்டியதை, உணர வேண்டியதைச் சொல்லும் திறன் கவிதைக்குத்தான் உண்டு.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் எழுதினேன். அது தலைவி தனது விரக தாபத்தை தலைவனுக்கு உணர்த்தும் பாடல். பாடல் பதிவானவுடன், இந்தப் பாடலுக்கு முன்னால் பாடுவதற்கு தொகையறா இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதன் வரிகள் பழமையானதாக இருக்கவேண்டும் என்றார்.
அப்படியானால் சங்கப் பாடல் ஒன்றையே சொல்கிறேன் என்றேன். அந்தப் பாடலில் 2-ம் நூற்றாண்டின் தமிழும், 21-ம் நூற்றாண்டின் தமிழும் டிஜிட்டலில் கைகோர்த்திருக்கும். இது இன்றைக்கு முடிந்திருக்கிறது என்றால், 25-ம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை வாழாதா? என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.