முகப்பு
தமிழ்நாடு

காலியாகிறது டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம்: புதிய இடத்தில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

சென்னை,பிப்.28: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகம் காலி செய்யப்பட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:56 PM
பகிர்:

சென்னை,பிப்.28: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகம் காலி செய்யப்பட்டு வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள புதிய கட்டடத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் புதிய இடத்தில் அலுவலகம் முழுமையாக இயங்கத் தொடங்கும் எனத் தெரிகிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் செயல்பட்டு வந்தது. அரசினர் தோட்டத்தில் 1 லட்சம் சதுர அடி, பழைய எம்.எல்.ஏ. விடுதியில் 20 ஆயிரம் சதுர அடி என மொத்தம் 1.2 லட்சம் சதுர அடிப் பரப்பில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் செயல்பட்டது.

விண்ணப்பங்கள் பரிசீலனை, தேர்வு முடிவுகளை வெளியிடுவது என மொத்தம் 80 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

புதிய சட்டப் பேரவைக்காக... கடந்த 50 ஆண்டுகளாக அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம், புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக கட்டுமானப் பணிக்காக மாற்றப்பட்டு வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிரீம்ஸ் சாலையில் வணிக வரித் துறைக்குச் சொந்தமான கட்டடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அலுவலகத்தை காலி செய்யும் பணி தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 7 முதல் 10 பிரிவுகள் வீதம் காலி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 20 பிரிவுகள் வரை காலி செய்யப்பட்டு விட்டது. அடுத்த ஒரு வாரத்துக்குள் மொத்த அலுவலகமும் காலியாகும் எனத் தெரிகிறது.

1.2 லட்சத்தில் இருந்து 50 ஆயிரம்... அரசினர் தோட்டத்தில் 1.2 லட்சம் சதுர அடிப் பரப்பில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது மாறியுள்ள இடம் வெறும் 50 ஆயிரம் சதுர அடிப் பரப்பு அளவு தான். இதனால், அங்கு இட நெருக்கடி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகத்துக்காக இட மாற்றத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் அதிகாரிகள், மாற்று இடம் நெருக்கடியாக இருப்பதை எண்ணி வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தாற்காலிகமாக இந்த இடம் ஒதுக்கப்பட்டாலும், நிரந்தரமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுத் தேர்வு எழுதுவோர் விடுத்துள்ளனர்.

விண்ணப்பங்கள் விநியோகம்... அரசுத் துறை தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் மற்றும் அவற்றைப் பெறும் பணிகள் புதிய அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இட நெருக்கடி காரணமாக, விண்ணப்பங்களை வாங்க வருவோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசினர் தோட்டத்தில் பரந்து விரிந்த இடத்தில் இருந்த போதும் கூட, இட நெருக்கடி இருந்தது. அது சமாளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது உள்ள இடம் தேர்வர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

புதிய சட்டப் பேரவைக் கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் அலுவலகங்கள் காலி செய்யப்படும். அங்கு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு இடம் ஒதுக்கலாம் என்று முதல்வர் கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசுத் துறைகளில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பும் பணியில் பெரும் பொறுப்பு டி.என்.பி.எஸ்.சி.க்கு உள்ளது.

இந்தச் சூழலில், அந்த அலுவலகத்துக்கு மிகக் குறுகியதாக மாற்று இடம் அளிக்கப்பட்டுள்ளதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், பரந்து விரிந்து பரப்பு கொண்ட இடத்தை டி.என்.பி.எஸ்.சி.க்கு ஒதுக்க வேண்டும் என அரசுத் தேர்வு எழுதுவோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.