முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டு மாதத்துக்குள் 40 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளுக்கும் மண்ணெண்ணெய்

சென்னை, மார்ச் 22:""தமிழகத்தில் புதிதாக கொடுக்கப்பட்ட 40 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கும் அடுத்த இரண்டு மாதத்துக்குள் முழு அளவில் மண்ணெண்ணெய் வழங்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மண்ணெண்ணெய் வழங

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:11 PM
பகிர்:

சென்னை, மார்ச் 22:""தமிழகத்தில் புதிதாக கொடுக்கப்பட்ட 40 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கும் அடுத்த இரண்டு மாதத்துக்குள் முழு அளவில் மண்ணெண்ணெய் வழங்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் வழங்கும் முறை கிராமம் முதல் மாநகரம் வரை வேறுபடுகிறது.

கிராமத்தில் ஒரு அட்டைக்கு 3 லிட்டரும், பேரூராட்சிக்கு 5 லிட்டரும், நகரப் பகுதிகளுக்கு 8 லிட்டரும், மாநகரப் பகுதிகளுக்கு 10 லிட்டரும் கொடுக்கப்படுகிறது. கேஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு இந்த அளவு வழங்கப்படுகிறது.

40 லட்சம் அட்டைகள்: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் புதிதாக 40 லட்சம் ரேஷன் அட்டைகள் கொடுக்கப்பட்டன. ஆனால், இந்த அட்டைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அளவை கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், போலி அட்டைகள் ஒழிப்பு உள்ளிட்ட காரணங்களால் மண்ணெண்ணெய் விநியோகத்தின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால், புதிய அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் கொடுக்கப்படும் அளவு அதிகரித்துள்ளது. புதிய அட்டைகளுக்கு இதுவரை 3 லிட்டராக கொடுக்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய்

அளவு அண்மையில் 5 லிட்டராக உயர்த்தப்பட்டது. இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அந்தத் துறையின் செயலாளர் க.சண்முகம் கூறியது:

""பழைய அட்டைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை, புதிய அட்டைகளுக்கும் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மண்ணெண்ணெய் வழங்குவதில் புதிய அட்டை, பழைய அட்டை என்ற வேறுபாடு இருக்காது.

போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்படுவதால், மீதம் கிடைக்கும் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக புதிய அட்டைகளுக்கு கொடுக்கப்படும்.

நிதிநிலை அறிக்கையில் உணவுத் துறைக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது, உண்மையல்ல. தமிழகத்தில் சர்க்கரைத் தேவையின் அளவு 20

ஆயிரம் டன்னில் இருந்து 35 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து இந்தத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. 10 சதவீதம் லெவி (அதாவது கூட்டுறவு சங்கங்கள் அரசுக்கு மானிய விலையில் அளிக்கும் சர்க்கரையின்) சர்க்கரையின் அளவு கடந்த ஆண்டு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சர்க்கரை ரூ.40}க்கு விற்கப்பட்டது. இப்போது, ரூ.30 ஆகக் குறைந்துள்ளது. சர்க்கரைக்கு மட்டும் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கம் செய்யப்படுகிறது.

இதேபோன்று, சிறப்பு பொது விநியோக திட்டத்தின்கீழ், வழங்கப்படும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் உணவுத் துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. சர்க்கரை, பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.250 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டு உணவுத் துறைக்கு ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார் க.சண்முகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.