டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது?
திருச்சி, மே.3: ஆண்டுக்கு ரூ. 13 ஆயிரம் கோடியை ஈட்டித்தரும் எங்களை, பணி நிரந்தரம் செய்யக் கூடாதா?, 4 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை இது. தமிழகத்தில் தனியார் நடத்தி வந்த மதுக
திருச்சி, மே.3: ஆண்டுக்கு ரூ. 13 ஆயிரம் கோடியை ஈட்டித்தரும் எங்களை, பணி நிரந்தரம் செய்யக் கூடாதா?, 4 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை இது.
தமிழகத்தில் தனியார் நடத்தி வந்த மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் என்ற அ.தி.மு.க. அரசின் உத்தரவால், 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலமாக ஏறத்தாழ 6,000}க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் தொடங்கப்பட்டன.
இந்தக் கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் பார் உதவியாளர் நிலைகளில் பணிபுரிய மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் சுமார் 32,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Advertisement
தொடக்கத்தில் மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ. 2,000, விற்பனையாளருக்கு ரூ. 1000 தொகுப்பூதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மதுக்கடைகள் மூலம் நல்ல வருவாய் கிடைத்ததால், மேற்பார்வையாளர், விற்பனையாளர்களுக்கு மேலும் ரூ. 1000 ஊதியத்தை அரசு உயர்த்தியது. இதனால் மேற்பார்வையாளர்கள் ரூ. 3,000, விற்பனையாளர் ரூ. 2,000 ஊதியமாக பெற்று வந்தனர். 2006}ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க. அரசு இருமுறை ஊதியத்தை உயர்த்தியதால், மேற்பார்வையாளர்கள் தற்போது ரூ. 4,000, விற்பனையாளர்கள் ரூ. 2,800, பார் உதவியாளர்கள் ரூ. 2100 என்ற நிலையில் ஊதியத்தைப் பெற்று வருகின்றனர்.
தொகுப்பூதியம் பெற்று வரும் தாங்கள், அரசு நிர்ணயித்தவாறு பணியாற்றியுள்ளதால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.
ஆண்டுக்கு ரூ. 13,000 கோடி: தமிழகத்தில் "டாஸ்மாக்' மூலம் ஆண்டுக்கு ரூ. 13,000 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மக்கள் நலத் திட்டங்களுக்கு இந்தத் தொகை செலவிடப்படுகிறது.
இவ்வாறு அரசுக்கு வருவாயை அதிகமாக ஈட்டித் தரும் எங்களது நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.
பணி நிரந்தரம் குறித்து அரசு மௌனம் சாதிப்பது ஏன்? என்று தெரியவில்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர். மேற்பார்வையாளர்களாகப் பணிபுரியும் பலர் பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் கல்வித் தகுதிக்குத் தக்கவாறு பணியமர்த்த வேண்டும் என்றும் இவர்கள் கோருகின்றனர்.
முன்புபோல ஊக்கத் தொகை: நகர்ப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ. 9 லட்சம் என்றும், கிராமப்புறங்களில் உள்ள கடைகளுக்கு ரூ. 3 லட்சம் என்றும் மாத விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்ததால் ஒரு சதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. சென்ற ஆண்டு எந்தத் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதோ, அதை விடக் கூடுதலாக விற்பனை செய்தால்தான் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பது அறிவிப்பாக உள்ளது. சில இடங்களில் விற்பனை அதிகமாக இருக்கும். சில இடங்களில் விற்பனை இருக்காது. எனவே, முன்புபோலவே ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.