முகப்பு
தமிழ்நாடு

துயரத்தில் ராமேசுவரம் மீனவர்கள்

ராமநாதபுரம், மே 4: திசை மாறி வீசும் சூறாவளிக் காற்று, மீன் வளம் குறைந்து போனது, நீரோட்டத்தின் தன்மைக்கேற்ப திசைமாறிச் சென்று விடுவதால் நடைபெறும் கைது சம்பவங்கள், இலங்கை ராணுவத்தினரின் தொடர் தாக்குதல்க

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:25 PM
பகிர்:

ராமநாதபுரம், மே 4: திசை மாறி வீசும் சூறாவளிக் காற்று, மீன் வளம் குறைந்து போனது, நீரோட்டத்தின் தன்மைக்கேற்ப திசைமாறிச் சென்று விடுவதால் நடைபெறும் கைது சம்பவங்கள், இலங்கை ராணுவத்தினரின் தொடர் தாக்குதல்கள், மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் பிழைப்பின்றி இருத்தல்... இப்படியாக பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் சூறாவளிக் காற்று திசை மாறி வீசுகிறது. இதனால் கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன. நங்கூரம் போட்டு நிறுத்தி வைத்திருந்தாலும், அதை இழுத்துக்கொண்டு வந்து பிற படகுகளின் மீது மோதி சேதமடைகின்றன. ஒரு படகு சேதமானால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகிறது. இப் பிரச்னைக்கு இன்று வரை ஒரு நிரந்தரத் தீர்வு இல்லை.

தனுஷ்கோடி முதல் கோடியக்கரை வரையிலான கடல் பகுதியின் பரப்பளவு குறைவாகவும், ஆழம் குறைந்ததாகவும் உள்ளது. இங்கு போதுமான மீன் வளமும் இல்லை. எனவே, அதிகமான மீன் வளம் உள்ள கடல் பகுதியைத் தேடி மீனவர்கள் போக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

Advertisement

இலங்கையில் மீனவர்களோ, படகுகளோ அதிகம் இல்லை. அதனால் இலங்கைக் கடல் பகுதியில் மீன் வளம் நிறைந்துள்ளது. இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் நடவடிக்கை என்று அரசு எச்சரித்தும், நமது பகுதியில் மீன் வளம் இல்லாததால், வயிற்றுப் பிழைப்புக்காக கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

நீரோட்டம் காரணமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்கும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிக்கும் வந்து விடுகின்றனர். ஆனால், அன்னிய நாட்டுக்குள் நுழைந்ததாக இரு நாட்டு மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகின்றன.

மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் காலங்கள்

கடலில் மீன் வளத்தை பெருகுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 30 வரை விசைப் படகுகளில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேறு தொழில் எதுவும் தெரியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இவர்களுக்கு அரசு தரும் நிவாரணமோ ரூ.500 தான். அதனால் தடை விதிக்கப்பட்ட 45 நாள்களும் கடன் வாங்கித் தான் வாழ்க்கைப் படகை கரை சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.

இலங்கையில் உள்நாட்டுச் சண்டை நடந்து வந்த காலங்களில் ஏராளமான மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கை, கால்களை இழந்து ஊனமாயினர். இச் சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன.

மீனவர்களைத் தாக்குவதும், படகுகளையும், விலையுயர்ந்த மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துவதும், விலையுயர்ந்த மீன்களைக் கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகின்றன. இப் பிரச்னைக்கும் இன்றுவரை ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை.

இந்திய-இலங்கை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கலந்து பேசி, இருநாட்டு மீனவர்களும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி, மீன் பிடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி. ராயப்பன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.