திருச்சி: தமிழகத்தில் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை எழுதுவதற்கு சார்பதிவகங்களில் ஆவண எழுத்தர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால், மீண்டும் ஆவண எழுத்தர் உரிமத்தை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் துறைகளில் பத்திரப் பதிவுத் துறையும் ஒன்று. பத்திரங்களைப் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று, சிட்டா அடங்கல் வழங்கல், பதிவுத் திருமணம், நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள், இதர நிறுவனங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாயை இந்தத் துறை ஈட்டித் தருகிறது.
தமிழகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சார்பதிவகங்கள் உள்ளன. இவை பத்திரப் பதிவுக்கு ஏற்றவாறு, மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு சுமார் ரூ. 1500 கோடிக்கு மேல் பத்திரப் பதிவுத் துறை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
பத்திரப் பதிவுத் துறையில் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவு செய்வதில் ஆவண எழுத்தரின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்களை கொண்டோ அல்லது தாங்களே ஆவணத்தைத் தயார் செய்தும் எழுதலாம் என்றிருந்தாலும், பொதுமக்கள் ஆவண எழுத்தர்கள் மூலமாகத்தான் தங்கள் பத்திரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
ஏனெனில், ஆவணங்களைப் பதிவு செய்யும் போது, பதிவுத்துறை நுணுக்கம், சட்டக் கூறுகளோடு ஆவண எழுத்தர்கள் பத்திரம் பதிவு செய்து தருவர் என்பதாலேயே, இன்றைக்கும் ஆவண எழுத்தர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக கிராக்கி இருக்கிறது.
தற்போது கணினி மூலமாக பத்திரம் உள்ளிட்ட
ஆவணங்கள் அச்சு செய்யப்பட்டாலும், ஆவண எழுத்தர்களின் பங்கு அங்கும் அதிகம் தேவைப்படுகிறது.
முன்பு, ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் மாவட்டத்தில் ஒரு மையத்தில் பதிவுத் துறை மூலமாகத் தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் அவர்களுக்கு ஆவண எழுத்தர் உரிமம் வழங்கப்படும்.
இதில் மாநிலத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஆவணம் எழுதும் உரிமத்துக்கு "ஏ' நிலை என்றும், மாவட்ட அளவில் எழுத "பி' நிலை என்றும், குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த சார்பதிவகத்தில் மட்டும் எழுதுவதற்கு "சி' நிலை என்றும் குறிப்பிடப்பட்டு உரிமம் வழங்கப்படும்.
ஆனால், கடந்த 1997-க்குப் பிறகு இந்த உரிமம் வழங்குவதை அரசு நிறுத்திவிட்டது. அதன் பின்னர், ஆவண எழுத்தர் உரிமத்தை அரசு வழங்கும் என்று பலர் எதிர்பார்த்திருந்த நிலையிலும், அரசு இன்னமும் அனுமதி வழங்காமல் உள்ளது.
முன்பு ஆவண எழுத்தராவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போது பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்போடு தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் இளநிலை, உயர்நிலைப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் ஆவண எழுத்தராகிவிடலாம் என்று காத்திருப்பவர்கள் பலருக்கு அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பட்டம் கட்டாயம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தட்டச்சில் இளநிலை, உயர்நிலையில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை அரசு தளர்த்திக் கொண்டு, மீண்டும் ஆவண எழுத்தர் உரிமத்தை வழங்க வேண்டும் என்கிறார் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நாராயணமூர்த்தி.
தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் சுமார் 1500 முதல் 2000 பேர் ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கும், அதற்குரிய தேர்வை எழுதுவதற்கும் தயாராக உள்ளனர். அரசு இதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்கள் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.