தமிழ்நாடு

கால்நடை தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

திருச்சி, : கடந்த 8 மாதங்களில் பால் உற்பத்திக்குத் தேவையான கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் பால் உற்பத்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். த

கு. வைத்திலிங்கம்

திருச்சி, : கடந்த 8 மாதங்களில் பால் உற்பத்திக்குத் தேவையான கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் பால் உற்பத்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான அளவு பாலை ஆவின் நிறுவனமும், தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் கொள்முதல் செய்து வருகின்றன.

இதுவரை ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வந்த பால் உற்பத்தியாளர்கள், கால்நடை தீவனங்களின் விலை உயர்வு, உயர்த்தப்படாத கொள்முதல் விலை போன்ற காரணங்களால் தனியாருக்கு பாலை வழங்குவதற்குத் தயாராகி வருகின்றனர்.

ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் பாலில் 4.5 சத கொழுப்பு சத்தும், 8.5 சத இதர சத்துகளும் கொண்ட பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 15.88 -ம், 7.5 சத கொழுப்பு சத்தும், 8.5 சத இதர சத்துகளும் கொண்ட எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 24.28-ம் கொள்முதல் விலையாக பால் உற்பத்தியாளர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், தங்களுக்கு வழங்கப்படும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலை உயர்வால் பாதிப்பு: 2009, செப்டம்பர் மாதம் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அதன் பின்னர் வைக்கோல், புண்ணாக்கு போன்ற கால்நடை தீவனங்களின் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியிருக்கிறது என்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட வைக்கோல் தற்போது ரூ. 200 ஆகவும், சோளக் கட்டு ரூ. 150-லிருந்து ரூ. 300 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுபோல ஒரு கிலோ தவிடு ரூ. 5.50- லிருந்து ரூ. 8 ஆகவும், கடலைப் புண்ணாக்கு ஒரு கிலோ ரூ. 27-லிருந்து ரூ. 32 ஆகவும், கலப்புத் தீவனங்கள் கிலோ ரூ. 10-லிருந்து ரூ. 12.50 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் இதே நிலை தொடர்ந்தால் இருக்கிற மாடுகளை விற்பனை செய்துவிட்டு வேறு வேலைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவிக்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் பால் விலையை உயர்த்தாமல் பால் கொள்முதல் விலையை மட்டும் அந்தந்த மாநில அரசுகள் உயர்த்தி உள்ளன.

பால் விற்பனை விலையை உயர்த்தாமல் கொள்முதல் விலை புதுச்சேரியில் லிட்டருக்கு ரூ. 2.50 வரையிலும், கேரளத்தில் ரூ. 3 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையங்கள் தங்களுக்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு இரண்டு முறை ஊக்கத் தொகையையும் வழங்கியுள்ளது.

எனவே, மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பால் விலையை உயர்த்தாமல் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில இணைச் செயலர் என். கணேசன்.

பால் கொள்முதலும் குறைகிறது?: தினமும் 2.80 லட்சம் லிட்டர் முதல் 2.90 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனத்துக்கு, 50,000 லிட்டர் வரை பால் கொள்முதல் குறைந்துள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு கொள்முதல் விலை உயராமல் கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்தது, தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தால் மாடுகள் பால் சுரக்கும் அளவு குறைந்து வருவது போன்றவை காரணங்களாக உள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியாருக்கு மாறும் நிலையில் பால் உற்பத்தியாளர்கள்: அரசு வழங்கி வரும் கொள்முதல் விலையைக் காட்டிலும் தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 18 வரை விலை நிர்ணயித்து வழங்கி வருவதால் பல இடங்களில், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்திக் கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் முடிவில் கிராமப்புறங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசு பால் விலையை உயர்த்தி வழங்கும். அவசரப்பட வேண்டாம். நல்ல முடிவு வரும் வரை காத்திருக்கலாம் என்ற கருத்தை, தனியாருக்கு பால் வழங்கும் நிலையில் உள்ள உற்பத்தியாள்ரகளிடம் எடுத்துரைத்து வருகிறது பால் உற்பத்தியாளர் சங்கங்கள்.

தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 18 வரை பால் கொள்முதல் செய்வதற்கு உத்தரவிடும் அரசு, ஏன் அந்த விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பால் நிறுத்தும் போராட்டம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி, திங்கள்கிழமை முதல் (மே 17) பால் உற்பத்தியை நிறுத்தும் போராட்டத்தை மேற்கொள்ளவும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளன.

இதனால், பால் தட்டுப்பாடு ஏற்படு ம் சூழல் நிலவுகிறது. எனவே, அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT