முகப்பு
தமிழ்நாடு

கேள்விக்குறியாகும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி

திருச்சி : அரசுப் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவாக நடத்தப்பட்டு வரும் ஆங்கில வழிக் கல்வி முறைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாததால், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாண

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:05 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:30 PM

திருச்சி : அரசுப் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவாக நடத்தப்பட்டு வரும் ஆங்கில வழிக் கல்வி முறைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாததால், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விகுறியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலேயே முதல் முறையாக லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறை பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 2005 ஆம் ஆண்டில் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆங்கில வழிக் கல்வி முறை தொடங்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி முறையில் பாடம் நடத்துவது என்பது "சுயநிதிப் பிரிவு" போன்றது என்பதால், அதற்காக தனியாக ஆசிரியர்களை நியமிப்பது, அவர்களுக்குத் தர வேண்டிய ஊதியம் போன்றவற்றை பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள்தான் மேற்கொள்ள வேண்டும்.

இதன்படி, ஆங்கில வழிக் கல்வி முறையை அமல்படுத்திய பள்ளிகள் ஒவ்வொன்றும் தங்களது பள்ளிகளில் உள்ள பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஆசிரியர்களையும் நியமித்து, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையும் வழங்கி வருகின்றன.

ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதால், ஏற்கெனவே 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் பயின்றவர்கள் தொடர்ச்சியாக பிளஸ் 2 வரை அதே கல்வி முறையில் பயில வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்ததால் பெற்றோர்கள் மத்தியிலும் இந்தக் கல்வி முறைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தொடக்கத்தில் 6}ஆம் வகுப்பு மட்டுமே நடத்தி வந்த பள்ளிகள், படிப்படியாக தற்போது பிளஸ் 2 வரை ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 400 முதல் 600 பேர் வரை ஆங்கிலம் வழியாகக் கல்வி பயின்று வருகின்றனர்.

திடீர் பிரச்னை: இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளும் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்தது.

அரசுப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி முறையை சுயநிதிப் பிரிவில் நடத்துவதால், இப் பள்ளிகளுக்கான கட்டணத்தை கோவிந்தராஜன் கமிட்டிதான் அறிவிக்க வேண்டும்.

ஆனால், இதுவரை மண்ணச்சநல்லூரில் உள்ள இரு பள்ளிகளுக்கான கட்டணம் அறிவிக்கப்படவில்லை. இதற்காக இந்தப் பள்ளிகளிடமிருந்து இதுவரை எவ்விதத் தகவல்களும் கேட்டுப் பெறப்படவில்லை.

சுயநிதிப் பிரிவில் ஆங்கில வழிக் கல்வி முறையை நடத்துவதால், தங்கள் பள்ளிகளுக்கான கட்டணம் எவ்வளவு என்று நிர்ணயித்து, அதற்கான உத்தரவை வழங்காததால் மாணவ, மாணவிகளின் சேர்க்கையைத் தொடங்குவதற்கு இரு பள்ளிகளும் தயங்குகின்றன.

கட்டணத்தை நிர்ணயிக்காமல் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்கி, பின்னர் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், அரசின் முழுமையான உத்தரவு வரும் வரை காத்திருப்பதாக இரு பள்ளிகளின் சார்பில் கூறப்படுகிறது.

மாணவ- மாணவிகள் பாதிப்பு: 2010-11 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை நடைபெறாவிட்டாலும், இதற்கு முன்னர் இவ்விரு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறையின் கீழ் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் நிலைமை மேலும் கேள்விக்குறியாக உள்ளது.

மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-வது முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளில் 467 மாணவிகளும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறைந்தது 400 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

கல்விக் கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படாததால், தாங்கள் பள்ளிக்குச் செல்வோமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது என்கின்றனர் இந்த இரு பள்ளிகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகள்.

விரைவில் கட்டணம் அறிவிக்கப்படும்: மாவட்டத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 5 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டண விவரம் கொடுக்கப்பட வேண்டும்.

மண்ணச்சநல்லூரில் உள்ள இரு அரசுப் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவில் நடத்தப்படும் ஆங்கில வழிக் கல்வி முறைக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, விரைவில் வழங்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறியலுக்குத் தயார்: ஏற்கெனவே இரு பள்ளிகளும் நல்ல தேர்ச்சி விழுக்காட்டை பெற்று வந்த நிலையில், அங்கு ஆங்கில வழிக் கல்வி முறை தொடங்கப்பட்டதால் எங்கள் குழந்தைகளைச் சேர்த்தோம்.

இந்தப் பிரச்னையில் உரிய தீர்வை ஓரிரு நாள்களில் எடுக்கவில்லை எனில், விரைவில் மண்ணச்சநல்லூரில் மிகப் பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனப் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.