தமிழ்நாடு

அரியலூர் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்கப்படுமா?

அரியலூர் : தமிழகத்தில் அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்யப்படும் அரியலூர் மாவட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் எ

கு. வைத்திலிங்கம்

அரியலூர் : தமிழகத்தில் அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்யப்படும் அரியலூர் மாவட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

 ஜவுளி, ஆயத்த ஆடைகளின் தொழில் பேட்டையாக திருப்பூர் நகரம் விளங்குவது போல, கட்டுமானத் தொழிலுக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிமென்ட் உற்பத்தி நகரமாக அரியலூர் திகழ்ந்து வருகிறது.

 அரியலூர் மாவட்டத்தில் ஆலத்தியூர், கோவிந்தபுரம் பகுதிகளில் மெட்ராஸ் சிமென்ட்ஸ் தொழிற்சாலையும், அமீனாபாத், கயர்லாபாத் கிராமங்களில் டால்மியா சிமென்ட்ஸ் தொழிற்சாலையும், ரெட்டிப்பாளையத்தில் அல்ட்ராடெக் சிமென்ட் தொழிற்சாலையும், கீழப்பழூரில் செட்டிநாடு சிமென்ட் தொழிற்சாலையும், செந்துறை அருகேயுள்ள தளவாய் கிராமத்தில் இந்தியா சிமென்ட்ஸ் தொழில்சாலையும், அரியலூர் நகரில் கல்லங்குறிச்சி சாலையில் அரசு சிமென்ட்ஸ் தொழில் சாலையும் அமைந்துள்ளன.

 இதுமட்டுமல்லாமல், அரியலூர் மாவட்டத்தையொட்டி, மேலமாத்தூரில் ஜேப்பியார் சிமென்ட்ஸ் தொழிற்சாலையும், கல்லக்குடி பளிங்காநத்தத்தில் டால்மியா சிமென்ட்ஸ் தொழிற்சாலையும் அமைந்துள்ளன.

 இந்த தொழிற்சாலைகளில் தினமும் 50 ஆயிரம் டன் சிமென்ட் தோராயமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் முழுத் தேவையை மட்டுமல்லாது கேரளம், இலங்கையில் 18.5 சதவீத சிமென்ட் தேவையை இந்தத் தொழிற்சாலைகள்தான் நிறைவு செய்து வருகின்றன.

 மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தயாரிப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருள்களில் ஒன்றான சுண்ணாம்புக் கல் (படிகவகை) சுரங்கம் அதிகளவில் இருக்கின்றன. இதனால், பல மைல் தொலைவிலிருந்து சுண்ணாம்புக் கல் கொண்டு வரும் தேவையில்லாமல், ஆலைக்கு அருகில் குறிப்பிட்ட பகுதிகளில் சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக் கல்லை கொண்டு சிமென்ட் உற்பத்தியை இந்தத் தொழிற்சாலைகள் மேற்கொண்டு வருகின்றன.

 இந்த மாவட்டத்தில் 7 சிமென்ட் தொழிற்சாலைகள் இருந்தும், இந்த ஆலைகளைக் கண்காணிப்பதற்கான மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இதுவரை அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்படாமலேயே உள்ளது.

 திருச்சி திருவெறும்பூர் சாலையிலுள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்த சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன.

 சிமென்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கோ, ஆலையை விரிவுபடுத்துவதற்கோ அல்லது சுண்ணாம்புக் கல் சுரங்கத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கோ முன்னர் இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர், பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும்.

 பின்னர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஆலையைப் பார்வையிட்டு, சுற்றுச்சூழலுக்கு ஏதும் அந்த தொழிற்சாலையால் பாதிப்பு ஏற்படுமா, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா போன்றவை குறித்தும் ஆய்வு செய்வர். அதன் பிறகு அனுமதி வழங்கப்படும்.

 தொழிற்சாலை தொடங்கப்படும்போதே சிமென்ட் ஆலைகளுக்கு காற்று மாசுத் தடுப்புச் சாதனங்களும், சர்க்கரை ஆலை போன்றவற்றுக்கு நீர் மாசுத் தடுப்புச் சாதனங்களும் பொருத்தப்பட வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தி, அதன்படி அந்தந்தத் தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்களை பொருத்துவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 மேலும், ஆண்டுக்கு இரு முறை சிமென்ட் தொழிற்சாலைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆன்லைனில் கண்காணிப்பு: ஆண்டுக்கு இரு முறை தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்வதைக் காட்டிலும், அரசு சிமென்ட்ஸ் தொழிற்சாலையைத் தவிர, மற்ற சிமென்ட் தொழிற்சாலைகளில் ஆன்லைன் மூலமாக மாசுக் கட்டுப்பாடு கண்காணிக்கப்படுகிறது.

 ஒவ்வொரு தொழிற்சாலையும் சிமென்ட் உற்பத்தி செய்யும் போது, வெளியேற்றும் புகையின் அளவு இந்த ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் வகையில் அதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் தங்களது அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தொழிற்சாலைகளைக் கண்காணிக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அரியலூர் மாவட்டத்தில் மாசு பாதிப்பு தொடர்பாகப் புகார்களை அளிப்பதற்கு, இந்தப் பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது. புகார் கொடுப்பது என்றால் திருச்சி வரை செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர் அரியலூர் பகுதி மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT