முகப்பு
தமிழ்நாடு

தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகங்கள் திறக்கப்படுமா?

  குடியாத்தம்: தமிழ்நாட்டில் தேசிய பால் வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  தேசிய பால் வளர்ச்சி வாரியம் (நேஷனல் டெய்ரி டெவலப்மெண்ட்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:23 PM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 7:28 PM

  குடியாத்தம்: தமிழ்நாட்டில் தேசிய பால் வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 தேசிய பால் வளர்ச்சி வாரியம் (நேஷனல் டெய்ரி டெவலப்மெண்ட் போர்டு) சில ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் துவக்கப்பட்டது. இதன் மண்டல அலுவலகங்கள் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தொடங்கப்பட்டு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

 இந்நிலையில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மோட்டூர், தனகொண்டபல்லி, தாட்டிமானப்பல்லி, ஆர். கிருஷ்ணாபுரம், பூரகமானபல்லி ஆகிய 5 கிராமங்களில் திருப்பதி மண்டல அலுவலகத்தின்கீழ் பால் கொள்முதல் நிலையங்கள் அண்மையில் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக முகவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

 இந்நிலையங்களில் கணினியுடன் இணைக்கப்பட்ட நவீன உபகரணங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலில் உள்ள கொழுப்புச் சத்து, இதர சத்துகள், தண்ணீர் என சில நிமிடங்களில் தரம் பிரிக்கப்படுகிறது.

 பின்னர் பாலை எலக்ட்ரானிக் எடைமேடையில் உள்ள கேனில் ஊற்றினால் அதுவே தானியங்கி முறையில், துல்லியமாக பில்லை கணினி மூலம் வெளியிடுகிறது. பில்லில் பாலின் அளவு லிட்டரிலும், எடையிலும் குறிக்கப்பட்டுள்ளது. பாலுக்கான தொகையையும் பில்லில் தெரிவிக்கிறது.

 பாலுக்கு கூடுதல் விலையோடு

 விவசாயிகளுக்கும் சலுகைகள்!

 தரத்துக்கு ஏற்றவாறு பசும்பால் லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.15.50 லிருந்து அதிகபட்சம் ரூ. 22.50 வரையும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.20 லிருந்து ரூ.30 வரையும் கணக்கிடப்படுகிறது.

 குடியாத்தத்திலிருந்து நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வேன் மூலம் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 15 நாள்களுக்கு ஒரு முறை பில் தொகையும், மாட்டுத் தீவனங்கள் 15 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. மாதம்தோறும் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மருந்துகளும் 15 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை 20 சதவீத போனஸýம் உண்டு.

 முக்கிய நகரங்களில் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும்!

 எனவே, இந்த அமைப்பின் மண்டல அலுவலகங்கள் தமிழகத்திலும் தொடங்கப்பட்டு, கிராமங்கள்தோறும் பால் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கொள்கை பரப்புச் செயலர் கே.எம். நந்தகோபால், குடியாத்தம் ஒன்றியத் தலைவர் ஆர். பாலாஜி ஆகியோர் கூறியது:

 தமிழகத்தில் தொடங்கப்பட்ட கூட்டுறவு பால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு பாலுக்குண்டான தொகையை மாதக்கணக்கில் தராமல் அலைக்கழிக்கப்பட்டதால், பெரும்பாலான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு விட்டன. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, ஈரோடு, நெல்லை, வேலூர் ஆகிய இடங்களில் தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு அனைத்து கிராமங்களிலும் பால் கொள்முதல் நிலையங்கள் அமைக்கலாம். இதன் மூலம் படித்த வேலையில்லாத இளைஞர்களும் வேலைவாய்ப்பு பெறலாம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.