செங்கல் தட்டுப்பாட்டை போக்க புதியதோர் யோசனை
பாபநாசம் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியப் பகுதிகளில் செங்கல்லுக்கு மாற்றாக சிமென்ட் கல்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்க அரசு உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தை க
பாபநாசம் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியப் பகுதிகளில் செங்கல்லுக்கு மாற்றாக சிமென்ட் கல்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்க அரசு உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி, மாநிலம் முழுவதும் 21 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தது.
ஒரு வீடு 75 ஆயிரம் மதிப்பீட்டில், 207 சதுர அடி அளவில் வீடு கட்ட மதிப்பீடு செய்து முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
இந்நிலையில், ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தனியார் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாலும், செங்கல், சிமென்ட், கம்பி, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.
செங்கல்லுக்கு அதிக தட்டுப்பாடு உள்ளது. மழைக் காலங்களில் செங்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு தட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில் செங்கல்லுக்கு மாற்றாக சிமென்ட் கல்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும்.
அந்தத் தொழிற்சாலைகளைத் தொடங்க முன்வருவோருக்கு தொழில் முனைவேருக்கான சான்றிதழ், மானியத்துடன் கூடிய கடனுதவி உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து பாபநாசம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.டி.ஜெயக்குமார் கூறியது:
சிமென்ட், மணல், கம்பி, செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் அந்தப் பொருள்கள் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
குறிப்பாக, செங்கல் தட்டுப்பாடு இந்தப் பகுதியில் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்றாக எந்தக் காலத்திலும் உற்பத்தி செய்து தட்டுப்பாடின்றியும், குறிப்பிட்ட விலையிலும் வழங்கும் வகையில் சிமென்ட் கல் உற்பத்தியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தால் தட்டுப்பாடின்றி அவற்றை வழங்க முடியும்.
நெய்வேலி நிலக்கரி சாம்பல், மணல், சிமென்ட், சுண்ணாம்பு, ஜிப்சம் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சிமென்ட் கல்லை உற்பத்தி செய்ய சிறிய அளவிலான தொழிற்சாலைக்கு 30 குதிரை சக்தித் திறன் மோட்டாரை இயக்கத் தேவையான மின்சாரம் வேண்டும். சிறிய வகை தொழிற்சாலையில் ஒரு மாதத்துக்கு சுமார் ஒன்றரை லட்சம் சிமென்ட் கல்களைத் தயாரிக்கலாம். 8 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் சிமென்ட் கல்களைத் தயாரிக்கலாம். இந்தத் தொழிற்சாலையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
மழை, வெயில் காலங்களிலும் இந்தக் கல்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த கல்களைக் கொண்டு அனைத்து வகையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள முடியும்.
எனவே, இத் தொழிலைத் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் மானியத்துடன் கூடிய கடனுதவி போதுமான அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.