வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவியும் மனுக்கள்: முடங்கிக் கிடக்கும் ஆன்லைன் சேவை உயிர் பெறுமா?
சென்னை : தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் சேவை கடந்த 85 நாள்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு கோரி 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மன
சென்னை : தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் சேவை கடந்த 85 நாள்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு கோரி 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
÷மின் ஆளுமை மயமாக்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியை பதிவு செய்தல் ஆகியவற்றை ஆன்லைன் சேவையாக மாற்ற அரசு அனுமதித்தது.
÷இதையடுத்து எல்காட் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த எமர்ஜெஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து எம்பவர் எனப்படும் சிறப்பு மென்பொருள் (சாஃப்ட்வேர்) உதவியுடன் இந்தத் திட்டப் பணிகள் ரூ.2.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.
÷இதையடுத்து, வேலைவாய்ப்புத் துறையில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மென்பொருள்கள் முடக்கப்பட்டன. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக சோதனை செய்யாமலேயே அவசரகதியில் எம்பவர் என்ற மென்பொருள் செயல்படுத்தப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலவலகங்களில் பதிவு உள்ளிட்ட சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து,அண்ணா பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
÷ஆனால், இந்தச் சேவை சில மணி நேரத்திலேயே செயல்படாமல் முடங்கியது. 85 நாள்களாகியும், இந்த ஆன்லைன் சேவை இதுவரை உயிர் பெறவில்லை. இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை தொடர்ந்து மெüனம் காத்து வருகிறது.
÷இந்த நிலையில், ஆன்லைன் சேவை சீராக செயல்படுவது தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை. மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்களை இணையதளத்தில் "அப்லோடு' செய்யும் பணி மட்டுமே இப்போது நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது.
÷எனினும், இதுகுறித்து அரசு உறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை என்பதால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சீராக செயல்படுவதில் கடும் தேக்க நிலை நீடிக்கிறது. இதனால், வேலைவாய்ப்புத் துறை மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
÷இதைத் தொடர்ந்து, தினமும் ஏராளமான இளைஞர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களது பதிவு நிலவரம் குறித்து அறிய மனுக்களை அனுப்பி வருகின்றனர்.
÷இதில் பெரும்பாலான மனுக்களுக்கு, தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக ஆன்லைன் பதிவு சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வேலைவாய்ப்புத் துறை சார்பில் பதில் அளிக்கப்படுகிறது.
÷இந்த பிரச்னையில் அரசு மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மெüனம் இனியாவது கலையுமா?