மதுரை : மதுரையில் பெருந்தலைவர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான தீரர் சத்தியமூர்த்தி சிலை இப்போது மாநகராட்சி அலுவலகத்தில் சாக்குமூட்டையில் கட்டி மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
காமராஜரின் பெயர் பொறிக்கப்பட்ட அந்த சிலையின் கல்வெட்டு குப்பையில் கிடப்பது வேதனையளிக்கிறது என காங்கிரஸ் பிரமுகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
""நாட்டின் விடுதலைக்காக ஒருவரை மட்டும் மக்களவைக்கு அனுப்பினால் போதும் என்ற ஒரு நிலை வந்தால், நான் அனுப்பும் ஒரே நபர் சத்தியமூர்த்தி'' என மகாத்மா காந்தியே குறிப்பிட்ட பெருமைக்குரியவர் தீரர் சந்தியமூர்த்தி. சரளமான பேச்சு, எந்த விஷயமானாலும் துணிந்து தனது கருத்தைக் கூறும் திறன் என்று தலைவருக்கு உரிய தகுதியைப் பெற்றிருந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்ற இவர், பாரதியார் பாடலுக்கு ஆங்கிலேய அரசு தடைவிதித்த போது அதைக்கடுமையாக எதிர்த்தவர்.
1923 மற்றும் 1926 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்றவர். 1934 -ல் தில்லியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுபெற்றவர். இந்திய தூதுக்குழு தலைவராக 1919 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு காந்தியடிகளால் அனுப்பிவைக்கப்பட்டவர். 1938-ல் சென்னை நகர மேயராகத் தேர்வு பெற்றவர். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.
சுதந்திரப் போராட்ட தீரரான சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குருவாக மதிக்கப்பட்டவர். அவரது பெயரில்தான் சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் உள்ளது.
1961-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த காமராஜர், மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் முன்பாக தீரர் சத்தியமூர்த்தியின் மார்பளவுச் சிலையைத் திறந்துவைத்தார்.
நீண்டகாலமாக இருந்துவந்த அவரது சிலையை அண்மையில் போக்குவரத்து சீரமைப்பு எனக்கூறி மாநகர் காவல்துறையும், மாநகராட்சியும் சேர்ந்து அகற்றிவிட்டது. ஆனால், அந்தச் சிலை அருகே இருந்த அம்பேத்கர் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரது சிலையை அகற்ற இருவேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அச்சிலைகளை அகற்றவில்லை.
தீரர் சத்தியமூர்த்தி சிலையை அகற்ற யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால் இரவோடு, இரவாக அகற்றிவிட்டனர். மேலும், அகற்றப்பட்ட அச்சிலை வேறு இடத்தில் வைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் உறுதிகூறினர்.
ஆனால், சத்தியமூர்த்தி சிலை அகற்றப்பட்டு பல நாள்களாகியும் அதனை மீண்டும் நிறுவ இதுவரை எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. மேலும், அவரது சிலையை திலகர் திடல் அருகே உள்ள மாநகராட்சி தெற்குமண்டல பொறியாளர் அலுவலக வளாகத்தில் சிறிய அறையின் மூளையில் சாக்கு மூட்டையில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது.
சிலையின் அடியில் இருந்த கல்வெட்டு, மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தின் பின்பகுதியில் குப்பைகளுக்கு இடையே போடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் சிலையைத் திறந்த அன்றைய முதல்வர் காமராஜர் பெயரும், சிலை திறந்த ஆண்டும் (1961) குறிக்கப்பட்டுள்ளது.
தீரர் சத்தியமூர்த்தியின் சிலை பொதுமக்களது போக்குவரத்து வசதிக்காக அகற்றப்பட்டதாக போலீஸôர் கூறிய நிலையில், அச்சிலையை மீண்டும் அமைக்காமல், சிலை கல்வெட்டை குப்பையில் போட்டிருப்பது சுதந்திரப்போராட்டத் தியாகிகள் மற்றும் காங்கிரஸôரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து,மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, சிலையை விரைவில் வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். எங்கே, எப்போது சிலை மீண்டும் அமைக்கப்படும் என்பதை அதிகாரிகள் உறுதியளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.