முகப்பு
தமிழ்நாடு

புதிய பேரவை மண்டபத்தில் முப்பரிமாண வடிவ ஓவியங்கள்

சென்னை, அக். 29: புதிய சட்டப்பேரவை மண்டபத்தில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்கள் மாற்றப்படுகின்றன. முப்பரிமாண வடிவத்தில் தலைவர்களின் ஓவியங்கள் மார்பளவில் இடம்பெறவுள்ளன. இதற்கான பணிகள் த

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:57 PM
பகிர்:

சென்னை, அக். 29: புதிய சட்டப்பேரவை மண்டபத்தில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்கள் மாற்றப்படுகின்றன. முப்பரிமாண வடிவத்தில் தலைவர்களின் ஓவியங்கள் மார்பளவில் இடம்பெறவுள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. "ஏ' பிரிவில் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் துறைகள் மற்றும் செயலாளர்களின் அலுவலகங்கள் இடம்பெறவுள்ளன.

 அமைச்சர்களுக்கு: "ஏ' பிரிவு ஆறு தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில், ஆறாவது தளத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 ஐந்தாவது தளத்தில், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 நான்காவது தளத்தில், பள்ளிக் கல்வி, உயர் கல்வி, உணவுத் துறை, வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என 13 துறைகளின் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 மூன்றாவது தளத்தில், கால்நடை, பால்வளம், மீன் வளம், கதர்த்துறை என நான்கு அமைச்சர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான இருக்கைகள் மற்றும் இதர வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேஜை மற்றும் இருக்கைகள் தேவைப்படின் "டான்சி' நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

 முப்பரிமாண ஓவியம்: புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டப் பேரவை மண்டபத்தில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

 மகாத்மா காந்தியடிகள், அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., முதல்வர் கருணாநிதி, ஓமந்தூர் ராமசாமி உள்ளிட்டோரின் முழுஉருவப் படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

 இந்தப் படங்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், அந்தப் படங்கள் அப்படியே அச்சு வார்த்தது போன்று வரையப்பட்டு புதிய சட்டப் பேரவை மண்டபத்திலும் வைக்கப்பட்டிருந்தன.

 மிகப் பெரியதாக உருவெடுத்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அந்தப் படங்கள் சிறியதாக இருந்தன. அந்தப் படங்கள் பார்ப்பதற்கு சரியாகத் தெரிவதில்லை என்ற குறையும் இருந்து வந்தது.

 இந்த நிலையில், முப்பரிமாண வடிவத்தில் அந்தப் படங்கள் அனைத்தையும் ஓவியமாகத் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 எங்கு இருந்தும் பார்க்கலாம்: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவாவின் ஓவியமும் புதிய சட்டப் பேரவையில் இடம்பெறவுள்ளது.

 அனைத்துத் தலைவர்களின் படங்களும் மார்பளவுடன் வரையப்பட்டு வருகின்றன. முப்பரிமாணத்துடன் தலைவர்களின் படங்கள் தத்ரூபமாக இருப்பதால், அந்த ஓவியங்களை எங்கிருந்து பார்த்தாலும், அந்தத் தலைவர்களின் கண்கள் நம்மை உற்று நோக்குவதுபோல இருக்கும்.

 பெரும்பாலான தலைவர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள நிலையில், பெரியாரின் படம் புதிய சட்டப் பேரவை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரின் அலுவலகங்கள் அனைத்தும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் மாறுகின்றன.

 அதற்குள்ளாக அனைத்துத் தலைவர்களின் படங்களையும் ஓவியமாக வரையும் பணி முடிக்கப்பட்டு விடும் என சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.