மின்சார இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆலங்குடி: பராமரிப்புப் பணிகளில் மின் வாரியத்தினர் அலட்சியம் காட்டி வருவதால், மின் இழப்பு ஏற்படுவதுடன், விவசாயிகள், பொதுமக்கள் பல வகைகளிலும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்
ஆலங்குடி: பராமரிப்புப் பணிகளில் மின் வாரியத்தினர் அலட்சியம் காட்டி வருவதால், மின் இழப்பு ஏற்படுவதுடன், விவசாயிகள், பொதுமக்கள் பல வகைகளிலும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான ஆலங்குடியில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயமே. இந்தப் பகுதியில் ஆற்றுப் பாசன வசதி இல்லாததால், முற்றிலும் கிணற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், 50 அடியிலிருந்து தண்ணீர் இறைத்த காலம் மலையேறி, தற்போது சுமார் 500 அடி ஆழம் வரையிலும் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மின் தடை, விலைவாசி உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
பல்வேறு காரணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் வாரியத்தினரின் அலட்சியமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பொதுவாக, மின் கம்பங்கள் 100 அடி இடைவெளியிலும், அவற்றில் 27 அடி உயரத்தில் செல்லும் வகையிலும் மின் கம்பிகள் அமைக்கப்படுவது மின் வாரியத்தினரின் வழக்கம்.
ஆனால், ஆலங்குடியின் பெரும்பாலான பகுதிகளில் மின் கம்பிகள் 27 அடி உயரத்தில் செல்லாமல், இரு மின் கம்பங்களுக்கு இடையே ஊஞ்சலைக் கட்டியிருப்பதைப் போல தாழ்வாகச் செல்கின்றன.
30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்களும், மின் கம்பிகளும் அவற்றின் வலுவை இழந்திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், மின் கம்பங்களையோ, மின் கம்பிகளையோ குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், லேசாக காற்று வீசும் நேரத்திலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தடைபடுகிறது.
சில இடங்களில் வாழை, கரும்பு உள்ளிட்ட தோட்டங்களை உரசியபடி மின் கம்பங்கள் செல்வதால், சீரான மின்னழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, மின் மாற்றியும், விவசாயிகள் பயன்படுத்தும் மின் மோட்டார்களும் வெடித்துச் சிதறுகின்றன. கூடவே, மின் இழப்பும் ஏற்படுகிறது.
இதனால், துணை மின் நிலையத்தில் 110 கிவோ மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது, ஏறத்தாழ 7 ஆயிரம் யூனிட் மின்சாரம் இழப்பு ஏற்படுவதாக மின் வாரியத்தினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இதுபோன்ற சீரற்ற மின் விநியோகம், மின் இழப்பைத் தடுக்க, பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அங்குள்ள மின் மாற்றிகளில் கெப்பாசிட்டர், மீட்டர் பொருத்தியும் சேதம் தவிர்க்கப்படவில்லை.
மின் இழப்பு ஒருபுறம் தொடரும் நிலையில், விவசாயிகளும் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகின்றனர். உதாரணமாக, வடகாடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட வடகாடு, சேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் தோட்டத்தை உரசியபடி மின் கம்பி மிகவும் தாழ்வாகச் செல்வதால், விவசாயம் செய்ய இயலாத நிலை உள்ளது. இதைச் சீரமைக்குமாறு கடந்த ஓராண்டாக அவர் பல முறை மின் வாரிய அலுவகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், இவரது விளைநிலம் தரிசாகவே உள்ளது.
இதேபோல, புள்ளான்விடுதியைச் சேர்ந்த லோகநாதனின் வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மின் கம்பிகளை உயரத்தில் செல்லுமாறு மாற்றி அமைக்காமல், அவரது தோட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான வாழைகளை மின் வாரியத்தினர் வெட்டிச் சாய்த்துவிட்டனராம்.
மேலும், மிகவும் பின்தங்கியுள்ள கிராமப் பகுதிகளில் சாலையின் குறுக்கே மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலை தொடர்கிறது.
எனவே, மின் இழப்பைத் தடுக்கும் வகையில், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயரத்தில் செல்லும் வகையிலும், மரங்களுக்கிடையே செல்லும் மின் கம்பிகளை பிளாஸ்டிக் உறையுடன் செல்லும் வகையிலும் மாற்றியமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:
கிராமப்புறங்களில் மின் கம்பி பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதுதொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. எளிய குடும்பத்தினர் பல முறை அலைக்கழிக்கப்படுகின்றனர்.
எனவே, மனிதநேயமற்ற மின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆலங்குடி பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.