முகப்பு
தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தும் பணியில் அனைத்து ஆசிரியர்களையும் ஈடுபடுத்த பல்கலை. முடிவு

சென்னை, செப். 3: விடைத்தாள் திருத்தும் பணியில் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற பல்கலைக்கழக விதியை தீவிரப்படுத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ÷இதற்காக கல்லூரி ஆசிரியர் ச

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:46 PM
பகிர்:

சென்னை, செப். 3: விடைத்தாள் திருத்தும் பணியில் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற பல்கலைக்கழக விதியை தீவிரப்படுத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

÷இதற்காக கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் அடுத்த வாரம் ஆலோசனை நடத்த சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர் க.திருவாசகம் முடிவு செய்துள்ளார்.

÷பல்கலைக்கழகத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களின் கவனக் குறைவால், தேர்ச்சி பெற வேண்டிய மாணவர்கள் தோல்வி அடைந்ததாக முடிவுகள் அறிவிக்கப்படுவதும், தேர்வு எழுதிய மாணவருக்கு ஆப்சென்ட் வழங்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

Advertisement

÷இதற்கு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபாடு காட்டாததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

÷இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர் க.திருவாசகம் கூறியதாவது:

÷விடைத்தாள் திருத்தும் பணி என்பது கல்லூரி ஆசிரியர்களின் கடமைகளில் ஒன்று. இந்தப் பணியை அனைவரும் செய்தாக வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் விதி.

÷ஆனால், இதை யாரும் சரிவர பின்பற்றுவது கிடையாது. இதற்காக கடந்த பருவத் தேர்வுக்கு, முந்தைய பருவத் தேர்வின்போது அனைத்து கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

÷மேலும் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்து, விடைத்தாள் திருத்தும் நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

÷இதன் மூலம் அந்த பருவத் தேர்வின்போது 95 சதவீத ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஏப்ரலில் நடந்த பருவத் தேர்வின்போது, தேர்வு முடிந்ததும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால் 40 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனாலேயே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

÷எனவே, விடைத்தாள் திருத்தும் பணியில் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற விதியை தீவிரப்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ÷இதற்காக அடுத்த வாரத்தில் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளோம்.

÷விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியருக்குத் தேவையான விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

÷இதற்கு சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லையெனில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு வேறு பல்கலைக்கழக ஆசிரியர்களை அழைப்பதற்கும் சென்னை பல்கலைக்கழகம் தயங்காது.

÷தேர்வு முடிவுகளை பிழையின்றி, குறித்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம்.

÷ஒவ்வோர் ஆசிரியருக்கும் காலையில் 20 பேப்பர்களை கொண்ட ஒரு கட்டும், மதியம் ஒரு கட்டும் கொடுக்கப்படும். தேர்ச்சி பெற வேண்டிய மாணவருக்கு குறைந்த மதிப்பெண் அளித்து ஃபெயில் ஆக்குவது உள்ளிட்ட கவனக் குறைவுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்க முடியாத வகையில் தடை விதிக்கப்படும் என்றார்.

÷அரசாணையாக வெளியிடப்படுமா?... அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற அனைத்துப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசு தெரிவித்தது.

÷ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், அரசின் இந்த ஆலோசனையை நடைமுறைப்படுத்துவது கடினம். எனவே, விடைத்தாள் திருத்தும் பணியில் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபட வேண்டும் என்ற பல்கலைக்கழக விதியை  அரசாணையாக வெளியிட வேண்டும்.

÷அப்போதுதான் விடைத்தாள் திருத்தும் பணி தங்களுடைய கடமை என்பதை ஆசிரியர்கள் உணர்வர். இந்தக் கடமையில் இருந்து தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க முடியும் என மூத்த கல்வியாளர் ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.