அரசுப்பணி தேர்வுகளுக்கு வயது தளர்வுச் சலுகை அடுத்த ஆண்டு ஜூலை வரை மட்டுமே
சென்னை, செப். 13: அரசுப் பணித் தேர்வுகளை எழுத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை அடுத்த ஆண்டு (2011) ஜூலை வரை மட்டுமே அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2006-ம்
சென்னை, செப். 13: அரசுப் பணித் தேர்வுகளை எழுத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை அடுத்த ஆண்டு (2011) ஜூலை வரை மட்டுமே அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2006-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி முதல் இந்த வயது தளர்வுச் சலுகை அமலுக்கு வந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் அத்தியாவசியப் பணிகள் என கருதப்படும் காவல், மருத்துவம், ஆசிரியப்பணி ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட பணி நியமன தடைச் சட்டம் காரணமாக, அரசின் மற்ற எந்தத் துறைகளுக்கும் நேரடி நியமனங்கள் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை: 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், பாதிக்கப்பட்ட இளைஞர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக வயது தளர்வுச் சலுகை அமல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டுகள் வயது தளர்வு என அறிவிக்கப்பட்டது.
அதாவது, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 35 என்றால், ஐந்தாண்டுகள் வயது தளர்வுச் சலுகையுடன் சேர்த்து 40 வயதுக்குட்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதனால், ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற விண்ணப்பிக்கும் வாய்ப்பு பெற்றனர். எந்தக் காலம் வரை: ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை எந்த ஆண்டு அமலில் இருக்கும் என்பது குறித்து தேர்வு எழுதும் இளைஞர்கள், அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யாருக்கும் தெளிவான விவரம் தெரியவில்லை.
இந்த நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் கே.என்.வெங்கடரமணன் வெளியிட்ட அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
2006-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி முதல் 2011-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி வரையிலான காலத்தில் மட்டுமே வயது தளர்வுச் சலுகை அமலில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிக்கைகளில் உள்ள வயது வரம்புடன் ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகையைச் சேர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
என்னென்ன தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு தேர்வுகள் இப்போது நடத்தப்படவுள்ளன. குரூப் 1, குரூப் 2, வி.ஏ.ஓ., ஆகியன அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மற்றும் அறிவிக்கவுள்ள முக்கியமான தேர்வுகளாகும்.