தமிழ்நாடு

வீணாகும் தாட்கோ தொழில்பேட்டைக் கூடங்கள்!

திருப்பூர்: கோடிக்கணக்கான மதிப்பில் கட்டப்பட்ட திருப்பூர் தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் தொடங்க ஆதிதிராவிட தொழில்முனைவோர் முன்வராததை அடுத்து அக் கட்டடங்கள் பயனின்றி கிடக்கின்றன.  ஆதிதிராவிடர் தொழில்மு

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர்: கோடிக்கணக்கான மதிப்பில் கட்டப்பட்ட திருப்பூர் தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் தொடங்க ஆதிதிராவிட தொழில்முனைவோர் முன்வராததை அடுத்து அக் கட்டடங்கள் பயனின்றி கிடக்கின்றன.

 ஆதிதிராவிடர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க திருப்பூரை அடுத்த முதலிபாளையம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் | 10 கோடி செலவில் தாட்கோ தொழில்பேட்டை கடந்த 1994-ல் அமைக்கப்பட்டது. இத் தொழில்பேட்டையில் 100 தொழிற்கூடங்கள் உள்ளன. முழுக்க முழுக்க பின்னலாடை துணி உற்பத்தி (நிட்டிங்) தொழிலுக்கு என அமைக்கப்பட்ட இத் தொழில்பேட்டையில் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிடர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது. ஆரம்பத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் மட்டுமே இயந்திரங்கள் மீது கடன் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், கடன் பெற்று தொழில் துவங்கிய 54 ஆதி திராவிட தொழில்முனைவோர்களால் தொடர்ந்து சரிவர தொழில் செய்ய முடியாததை அடுத்து அவர்களால் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து, தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் துவங்குவோருக்கு கடன் வழங்குவதை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நிறுத்திக்கொண்டதை அடுத்து அத் தொழில்முனைவோர் வேறு வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள அரசு அனுமதியளித்தது.  இருப்பினும், முதலிபாளையம் தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் துவங்க ஆதி திராவிடர்கள் முன்வருவதில்லை. அதற்கு, ஆதிதிராவிட தொழில் முனைவோர்களுக்கு திருப்பூர் தொழில்துறை மத்தியில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அத் தொழில்பேட்டையில் தொழில் துவங்கிய 54 தொழில்முனைவோர்களில் 27 பேர் தொழிலை விட்டே விலகிவிட்டனர். இப்போது தொழில்புரிபவர்களும் போதிய வருவாய் ஈட்டக்கூடிய அளவில் தொழில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர். பின்னலாடை துணி உற்பத்தி (நிட்டிங்) என்பது ஜாப்ஒர்க் நிறுவனம் என்பதால் ஆடை உற்பத்தியாளர்களை சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது. தவிர, திருப்பூர் உற்பத்தியாளர்கள் மத்தியில் அவர்களின் உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் தொழில்புரியும் நிட்டிங் ஜாப்ஒர்க் நிறுவனத்தினர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு கிடைக்கிறது. தாட்கோ தொழில்பேட்டையில் தொழில்புரியும் ஆதிதிராவிட ஜாப் ஒர்க் நிறுவனர்களுக்கு அத்தகைய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.

இதுபோன்ற பல காரணங்களாலேயே தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் ஆதிதிராவிட தொழில்முனைவோர்கள் தொழிலைவிட்டு விலகுகின்றனர் என்றார் தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் துவங்கி பாதிக்கப்பட்ட ஒருவர்.

 அதன்படி, தொழில்முனைவோர்கள் தொடர்ந்து விலகுவதாலும், புதிய தொழில்முனைவோர் தொழில் துவங்க முன் வராததை அடுத்தும் தாட்கோ தொழில்பேட்டை கட்டடங்கள் ஆண்டுக்கணக்கில் வீணாகிக் கொண்டுள்ளன. அங்குள்ள தொழிற்கூட கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும், கோடிக்கணக்கான மதிப்புடைய இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் திருடப்படுவதுடன் இரவு நேரங்களில் அக்கட்டடங்கள் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. தாட்கோ கட்டடங்கள், இயந்திர தளவாட பொருள்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழில் நகரில் பாழடைந்து காணப்படும் அக்கட்டடங்களை மாற்றுத் திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT