வகுப்பறையே மாணவர் விடுதியானது: 15 ஆண்டாக தொடரும் அவலம்
பண்ருட்டி,டிச. 6: சொந்தக் கட்டடம் இல்லாததால் பண்ருட்டி, சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி விடுதி மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவதி அடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ
பண்ருட்டி,டிச. 6: சொந்தக் கட்டடம் இல்லாததால் பண்ருட்டி, சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி விடுதி மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1100-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
நீண்ட தொலைவில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்காக கடந்த 15 வருடங்களுக்கு முன் மாணவர் விடுதி ஏற்படுத்தப்பட்டது. சொந்தக் கட்டடம் இல்லாததால் 12 வருடங்களாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த விடுதி, கடந்த 3 வருடங்களாக பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
Advertisement
விடுதிக்காக மூன்று வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டதால் இட வசதியின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். வகுப்பறையில் தங்கியுள்ள விடுதி மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. குளியலறை இல்லாததால் திறந்த வெளியில் குளிக்க நேரிடுகிறது. இது பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது. காலைக் கடனை ஏரிக்கரையில் தான் கழிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் ரீனாமணிவண்ணன் கூறியது:
நீண்ட நாள்களாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த விடுதி, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. புதிய விடுதிக் கட்டடம் கட்ட ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் கோயில் தெரு, பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல இடத்தை தேர்வு செய்தோம். அருகே வசிப்பவர்கள் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியதால் விடுதி கட்டும் பணி தடைபட்டு வந்தது. வீரன்கோயில் அருகே உள்ள பாதை புறம்போக்கில் இடம் தேர்வு செய்து அதிகாரிகள் பார்த்து சென்றுள்ளனர். ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தங்கியுள்ள அறை அருகே நீர் நிலை உள்ளதால் கொசு மற்றும் விஷப் பூச்சிகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற ஸ்ரீகாந்த் என்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். எனவே மாணவர் விடுதி கட்ட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரீனாமணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.