முகப்பு
தமிழ்நாடு

சபரிமலையில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னை, டிச. 9: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:22 PM
பகிர்:

சென்னை, டிச. 9: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

 கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றவை.

 நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் இந்த விசேஷ நாள்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதையொட்டி அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

 இங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ரூ.121 கோடி செலவுக்கான "மாஸ்டர் பிளான்' உருவாக்கப்பட்டது. இந்தப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படவில்லை என்றாலும், தற்போது குறிப்பிட்ட சில பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

 இந்தத் திட்டத்துக்கான நிதியை சேகரிக்கும் பணியை திருவாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிதி, பக்தர்களிடமிருந்து நன்கொடையாகவும், அரவணப் பாயாசம், அப்பம் ஆகியவற்றின் விலையை உயர்த்தி கோவிலின் வருமானத்தை அதிகரித்தும் திரட்டப்படுகிறது.

 மேம்படுத்தப்பட்ட நிலக்கல்: கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துவரும் பஸ்கள், தனியார் டிராவல்ஸ் வாகனங்கள், பம்பாவில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதி சரியான பரமரிப்பின்றி இருந்தது.

 தற்போது, இங்கு ரூ. 10 கோடி செலவில் குடிநீர், உணவகங்கள், கழிப்பறை, ஓய்வெடுக்கும் அறைகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 பம்பாவில் மேற்கூரை: ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் முன் பக்தர்கள் பம்பா நதியில் நீராடுவது வழக்கம். அவர்களின் வசதிக்காக பம்பா முழுவதும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

 மேலும், பக்தர்கள் சிலர் பம்பாவில் தங்களது துணிகளை ஆற்றோடு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பம்பா நதியின் புனிதம் பாதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் தூக்கி எறியும் துணிகளை அப்புறப்படுத்த தன்னார்வத் தொண்டு அமைப்பினருடன் இணைந்து திருவாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

 மலைப் பாதையில் கழிப்பறைகள்: கூட்டம் அதிமாக இருக்கும் நாள்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 10 முதல் 18 மணி நேரம் வரை காத்திருப்பர். இந்நேரங்களில் பக்தர்கள் தங்களது இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

 இதை கருத்தில் கொண்டு பம்பாவில் இருந்து சபரிமலை சந்நிதானம்வரை மலைப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

 ஓய்விடங்கள்: சபரிமலைக்கு செல்லும் மலைப் பாதையான நீலிமலை மற்றும் அப்பாச்சி மேடு பகுதியில் பக்தர்களுக்கு மேற்கூரைகளுடன் கூடிய ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்விடங்களுக்குப் பக்தர்களிடையே வரவேற்பு காணப்படுகிறது.

 சுப்பிரமணியப் பாதை: மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் மற்றும் முதியோர் பயன்படுத்தும் சுப்பிரமணியப் பாதை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதை முழுவதும் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. இந்த வழியிலும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆன்-லைனில் பதிவு செய்து சுவாமி தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களும் இப்பாதையில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 பக்தர்களின் ஒத்துழைப்புத் தேவை: சபரிமலை பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பக்தர்களின் பங்களிப்பும் அவசியம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

 இது குறித்து கேரள மாநில காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியது: கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஐயப்பன் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க உதவவேண்டும். சபரிமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இங்கு பிளாஸ்டிக் பொருள்களை குப்பைதொட்டியில் பக்தர்கள் போட வேண்டும். சிறுநீர் கழிப்பதற்கு பக்தர்கள் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments