முகப்பு
தமிழ்நாடு

புத்தாண்டை அலங்கரிக்க வந்திருக்கும் புது வரவுகள்

சென்னை: புத்தாண்டை அலங்கரிப்பதற்காக விதவிதமான புது வகை டைரிகள், காலண்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.  புத்தாண்டு நெருங்குகிறது என்றாலே டைரி, காலண்டர் விற்பனை அதிகரித்துவிடும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:37 AM
பகிர்:

சென்னை: புத்தாண்டை அலங்கரிப்பதற்காக விதவிதமான புது வகை டைரிகள், காலண்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

 புத்தாண்டு நெருங்குகிறது என்றாலே டைரி, காலண்டர் விற்பனை அதிகரித்துவிடும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, கடைக்காரர்களும் ஆண்டுக்கு ஆண்டு புது வகையான டைரிகள் மற்றும் காலண்டர்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

 டைரி வகைகள்: டைரி, காலண்டர்களுக்கென சென்னை பாரிமுனையில் மொத்த விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே விற்பனை தொடங்கிவிட்டது.

Advertisement

 அதே நேரம், விலை உயர்வு காரணமாக, விலை உயர்ந்த டைரிகளின் விற்பனை குறைந்துள்ளது என்கின்றனர் கடைக்காரர்கள்.ரூ. 26, ரூ. 45, ரூ. 75, ரூ. 80 முதல் ரூ. 570 வரை சாதாரண மற்றும் சிறப்பு டைரிகள் பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 பொறியாளர்கள், மருத்துவர்கள், மேலாண்மை நிர்வாகிகள் பயன்படுத்துவதற்கென பிரத்யேக டைரிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த டைரிகளில் அந்தந்த தொழிலுக்கு ஏற்றவாறு பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

 விலை உயர்வு ஏன்?

 கடந்த ஜூன் மாதம் காகித விலை உயர்த்தப்பட்டதை அடுத்து டைரிகளின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்கின்றனர் விற்பனையாளர்கள்.

 கடந்த ஆண்டைக் காட்டிலும் சராசரியாக 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 23-க்கு விற்பனை செய்யப்பட்ட குறைந்த விலை டைரி, இப்போது ரூ. 26-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ரூ. 240-க்கு விற்கப்பட்ட நாள் குறிப்புகள் ரூ. 265-ஆகவும், ரூ. 390-க்கு விற்கப்பட்ட லெதர் டைரிகள் ரூ. 475-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

 பூட்டுடன் கூடிய டைரி: புது வகையான லெதர் அட்டையுடன் கூடிய டைரிகள், கால்க்குலேட்டருடன் கூடிய டைரி, பூட்டுடன் கூடிய டைரி ஆகியவை இந்த ஆண்டின் புது வரவுகளாகும்.

 லெதர் அட்டையுடன் கூடிய டைரிகள் மற்றும் நாள் குறிப்புகள் கண்ணைக் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன. இவை ரூ. 265 முதல் அதிகபட்சமாக ரூ. 570 வரை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன.

 டைரி ரகசியங்களைக் காக்க வேண்டும் என விரும்புபவர்களுக்காக, பூட்டுடன் கூடிய டைரி இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கென சிறு சாவி கொடுக்கப்பட்டுள்ளது. டைரியை மூடி பூட்டிக் கொள்ளலாம். இதில் விசிட்டிங் கார்டு, அடையாள அட்டை மட்டுமன்றி பணம் வைத்துக் கொள்வதற்கும் வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 475 ஆகும்.

 கால்குலேட்டருடன் கூடிய டைரியின் விலை ரூ. 465 ஆகும். நிதிப் பிரிவு மேலாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இந்த டைரி பயனுள்ளதாக இருக்கும்.

 முழுவதும் தோலால் ஆன டேபிள் டாப் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதில் ஒரு பகுதியில் கடிகாரமும், மற்றொரு பகுதியில் கால்குலேட்டரும் இடம்பெற்றுள்ளன. விசிட்டிங் கார்டு, பேனா, செல்போன் ஆகியவற்றை இதில் வைத்துக்கொள்ளலாம்.

 3டி காலண்டர்கள்: இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3டி காலண்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

 அழகிய குழந்தையின் படம் மற்றும் சுவாமி படங்களுடன் இந்த காலண்டர்கள் கிடைக்கின்றன. இதில் குழந்தை படமுடைய காலண்டர் காற்றில் அசையும்போது, குழந்தை கண்ணைத் திறந்து மூடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல, சுவாமி காலண்டர் சாதாரண நிலையில் இருக்கும்போது விநாயகரும், அசையும்போது லட்சுமி, சரஸ்வதி மற்றும் விநாயகர் அமர்ந்திருப்பதுபோலவும் தோற்றம் அளிக்கிறது. இந்த காலண்டர் ஒன்றின் விலை ரூ. 50 ஆகும்.

 டேபிள் காலண்டர்களிலும் புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அழகிய மரத்தால் ஆன அமைப்பில் காலண்டர் தொங்குவது போன்று ஒரு டேபிள் காலண்டர் இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 140 ஆகும். இந்த ஆண்டு அனைத்து வகை காலண்டர்களின் விலைகளும் ரூ. 1 முதல் ரூ. 3 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.