முல்லைப் பெரியாறு விவகாரம்: ஐயப்ப பக்தர்களின் பயணச் செலவு அதிகரிப்பு!
சென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் பயணச் செலவு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பொதுவாக தேனி மாவட்டம் குமுளி
சென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் பயணச் செலவு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பொதுவாக தேனி மாவட்டம் குமுளியைத் தேர்ந்தெடுப்பர். இவ்வழியாக சென்றால் சபரிமலைக்கு விரைவாக செல்வதுடன் சாலை வசதியும் சிறப்பாக இருக்கும்.
ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னை பூதாகாரமாக வெடிக்கத் தொடங்கிய நாள் முதல் இவ்வழியாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கம்பம், குமுளியைத் தாண்டி சபரிமலைக்கு செல்லவே பக்தர்கள் அச்சப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் மாற்று வழியில் சபரிமலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணச் செலவு அதிகரித்து ஐயப்ப பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
Advertisement
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பெரும்பான்மையானோர் ஒரு குழுவாக சொந்தக் கார்களிலோ, தனியார் வேன், பஸ்களிலோ தங்களது யாத்திரையை மேற்கொள்வர்.
தற்போது குமுளி, போடி மெட்டு வழியாக சபரிமலைக்குச் செல்ல முடியாததால் பக்தர்கள் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக சபரிமலைக்குச் செல்கின்றனர்.
இவ்வாறு மாற்று வழியில் செல்வதால் வழக்கத்தைவிட 300 கிலோ மீட்டர் தூரத்தை அதிகம் கடக்க வேண்டியுள்ளது. இதனால் தனியார் வாகனங்களின் வாகனக் கட்டணமும், டீசல் மற்றும் பெட்ரோல் செலவும் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஐயப்ப பக்தர் ஆனந்த் கூறியது: "நாங்கள் சென்னையில் இருந்து 36 பேர் கொண்ட குழுவாக சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டோம். இதற்காக நாங்கள் 5 நாள் வாடகை ரூ.58 ஆயிரத்துக்கு ஒரு பஸ்ûஸ முன் பதிவு செய்து சென்றோம். பயணத்தின் அட்டவணைப்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல் வழியாக தேனி சென்று அங்கிருந்து குமுளி வழியாக சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். பயணச் செலவு மற்றும் இதர செலவுகள் சேர்த்து ஒரு பக்தரிடம் இருந்து ரூ.2,300 வசூல் செய்தோம். ஆனால் முல்லை பெரியாறு பிரச்னையின் காரணமாக குமுளி வழியாக செல்ல முடியவில்லை. அதனால் எங்கள் குழு செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு சென்றது. இதனால் எங்களது மொத்த செலவு ரூ.20,000 அதிகரித்தது. மேலும் எங்களது பயண நாளும் அதிகரித்தது. இதனால் எங்களது குழுவுக்கும் டிராவலஸ் உரிமையாளருக்கும் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டது. ஒரு குழுவாக யாத்திரைக்குச் செல்லும்போது ஏழை, பணக்காரர் என்ற பேதம் பார்ப்பதில்லை. அதிகரித்த செலவை ஏற்க எங்கள் குழுவில் வந்த சில சாமானிய பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மன அமைதியுடன் யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் இம்முறை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாயினர்' என்றார்.
டிராவல்ஸ் உரிமையாளர் எஸ்.பிரபாகரன்: "முல்லைப் பெரியாறு விவகாரம் தொடங்கிய நாள் முதல் எங்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டவாறு உள்ளன. வேறு வழிகளில் செல்வதால் பக்தர்களுக்கு பஸ் செலவு அதிகரிப்பது மட்டுமல்லாமல் எங்களது பயண அட்டவணையிலும் குளறுபடிகள் ஏற்படுகின்றன. ஒரு பஸ் சீரான இடைவெளியில் கார்த்திகை தொடங்கி மார்கழி மாதம் வரை ஒரு மாதத்துக்கு 4 முதல் 5 தடவை சபரிமலை யாத்திரைக்குச் செல்லும். அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் பயண அட்டவணையை தயாரிப்போம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையின் காரணமாக சபரிமலை யாத்திரைக்கு ஏற்கனவே முன் பதிவு செய்துள்ளோருக்கு குறிப்பிட்ட நேரத்தில் பஸ்ûஸ அனுப்ப முடியாத நிலை உள்ளது' என்றார்.
கேரள-தமிழக எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாகவும், மாற்று வழியால் அதிகரிக்கும் செலவின் காரணமாகவும் பல ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதை தவிர்த்து விட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் சந்நிதானத்துக்கு கொண்டு சென்று இருமுடியை இறக்கித் தங்களது விரதத்தை முடிக்க வேண்டிய பக்தர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் தங்களது விரதத்தை முடித்து கொள்ளும் சூழ்நிலையை முல்லை பெரியாறு அணை விவகாரம் உருவாக்கியுள்ளது.