தமிழ்நாடு

செங்கல் சூளைகளாக அவதாரம் எடுத்துள்ள விளைநிலங்கள்!

புதுச்சேரி, பிப்.9: புதுச்சேரியில் பாகூர், குருவிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் இப்போது அதிகளவில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம், விளைநிலங்கள் அனைத்தும் செங்கல்சூளைகளாக அவதாரம் எ

ந.குப்​பன்

புதுச்சேரி, பிப்.9: புதுச்சேரியில் பாகூர், குருவிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் இப்போது அதிகளவில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம், விளைநிலங்கள் அனைத்தும் செங்கல்சூளைகளாக அவதாரம் எடுத்துள்ளன.

வியாபாரிகள் ஈடுபட்டிருந்த இத் தொழிலில் இப்போது விவசாயிகளே செங்கல் சூளைகளைத் தயார் செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் குடிசை வீடுகளை கல்வீடாக மாற்றும் திட்டம், தமிழகத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்களின் காரணமாக அதிளவில் வீடுகள் கட்டும் பணி ஒரே நேரத்தில் நடந்தன. இதனால் கடந்த 6 மாதங்களாக செங்கல் தட்டுப்பாடும், அதனால் விலை உயர்வும் ஏற்பட்டது.

4 ஆயிரம் செங்கல் ரூ.9,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தத் தட்டுப்பாடு காரணமாக இரண்டு மடங்காக இதன் விலை உயர்ந்தது. இப்போது ஓரளவுக்கு விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்குக் காரணம் இன்னும் 10 நாளில் இந்த ஆண்டில் சூளையில் வேகும் செங்கற்கள் விற்பனை வந்துவிடும். இருப்பினும் கடந்த ஆண்டை போன்று ரூ.9,500-க்கு செங்கற்கள் கிடைக்காது என்று இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

தாராளமாக செங்கல் கிடைத்தாலும் 4 ஆயிரம் செங்கல் ரூ.12 ஆயிரத்துக்குக் குறையாது. அப்படிப் பார்த்தால் ஒரு செங்கல் விலை ரூ.3 என்ற அளவில் இருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து செங்கல் சூளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார் பாகூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆர். ரகுபதி. "கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் விலை உயர்வு காரணமாக இப்போது தயாராகும் சூளையால் ஓரளவுக்கு லாபம் அதிகரிக்கும்.

சூளைக்குத் தேவையான விறகுகள் விலை உயர்வு,ஆள்கூலி உயர்வு போன்றவை அதிகரித்துள்ளன. அதை நாங்கள் ஈடுசெய்ய வேண்டியுள்ளது. செங்கல் தயாரிக்கும்போது மழை வந்துவிட்டால் அதிகமாக நஷ்டம் ஏற்படும். செங்கல் தயாரித்தப் பிறகு மழை பெய்தால் அதிக விலைக்கு கற்கள் விற்பனையாகும்' என்கிறார்.

பாகூரை சேர்ந்த ஜெகன் தன்னுடைய சொந்த வீடு கட்டுவதற்காக தன்னுடைய விளைநிலத்தில் செங்கள் சூளை தயார் செய்து வருகிறார். வெளியில் செங்கல் அதிக விலை விற்பதால் அவர் தன்னுடைய விளைநிலத்தில் செங்கல் தயாரிக்கிறார்.

பரிக்கல்பட்டைச் சேர்ந்த சம்பத் செங்கல் அறுக்கும் கூலித் தொழிலாளி. இப்போது அவரும் வீடு கட்டுகிறார். அதற்கு வெளியில் செங்கல் வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் என்று கருதி பாகூரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் நிலத்தில் செங்கல் சூளை தயார் செய்கிறார்.

1 லட்சம் செங்கல் தயார் செய்து அதில் பாதியை அந்த விவசாயிக்குக் கொடுக்க உள்ளார்.

செங்கல் அறுக்கும் தொழிலாளிகளுக்கு கடந்த ஆண்டு 1000 கல் அறுக்கக் கூலியாக ரூ.300 கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது கூலி அதிகமாக இருக்கும் என்று சூளை உரிமையாளர்களும், கூலித் தொழிலாளர்களும் கூறுகின்றனர்.

ஆனால் இதுவரை எவ்வளவு என்று முடிவு செய்யவில்லை என்று கூறுகின்றனர். செங்கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலைக்கு வரும் முன்பாக மொத்தமாக அட்வான்ஸ் தொகையாக ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என்று வாங்கிக் கொள்கின்றனர். இதை வேலை செய்து கழித்து வருகின்றனர்.

புதுச்சேரி பகுதியில் பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள உறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வந்து செங்கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குடும்பமாக வந்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

செக்யூரிட்டி வேலையில் இருந்து செங்கல் தொழிலாளியாக உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மாறியுள்ளார். அந்தப் பணியில் கொடுக்கப்படும் சம்பளம் குறைவாக இருப்பதாகவும், செங்கல் தொழிலில் கூலி அதிகம் கிடைக்கிறது என்கிறார்.

 குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கூலி அதிகமாகக் கிடைக்கும் என்ற காரணத்துக்காக முதன் முதலாக இந்த ஆண்டுதான் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார்.

விளைநிலங்கள் ஏற்கெனவே ரியல் எஸ்டேட்காரர்களிடம் சிக்கி மனைப்பட்டாக்களாக மாறியுள்ளன. இந்நிலையில், இப்போது நிலங்கள் மற்றொரு அவதாரமாக செங்கல் சூளைகளாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT