தொல்லியல் துறையிடம் புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை, பிப். 15: புனித ஜார்ஜ் கோட்டையை தொல்பொருள் ஆய்வுத் துறையிடமே ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை ஆட்சி மாறினாலும், அங்கு தமிழக அரசின் அலுவலகங்கள் செயல்படாமல் இருக்க இந்த ஏற்பாடுகள்
சென்னை, பிப். 15: புனித ஜார்ஜ் கோட்டையை தொல்பொருள் ஆய்வுத் துறையிடமே ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை ஆட்சி மாறினாலும், அங்கு தமிழக அரசின் அலுவலகங்கள் செயல்படாமல் இருக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தின் "ஏ மற்றும் பி' பிளாக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் "ஏ பிளாக்' பகுதியின் கட்டுமானம் முடிந்துள்ளது. ஆயினும் உட்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
"ஏ பிளாக்' ஆறு தளங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் ஆகியோருக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐந்து, நான்கு மற்றும் மூன்றாவது தளங்களில் அமைச்சர்களுக்கும், இதர துறைகளுக்கான அலுவலகங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட துறைகள்: இந்த நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த அரசுத் துறைகள் ஒவ்வொன்றாக புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் மாறி வருகின்றன. அமைச்சர்களின் அலுவலகங்கள் முதலில் காலி செய்யப்பட்டன. இப்போது, உள்துறை, பொதுத் துறை ஆகியவற்றின் அலுவலகங்கள் காலி செய்யப்பட்டு வருகின்றன.
புனித ஜார்ஜ் கோட்டை சட்டப் பேரவை மண்டபம், முதல்வர் அலுவலகம் என மூன்று தளங்களுடன் செயல்பட்டு வந்தது. இப்போது அனைத்து அலுவலகங்களும் காலி செய்யப்பட்டு வருகின்றன.
அதில், நிதித்துறை, நீதித்துறை, பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆகியவற்றின் அலுவலகங்கள் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்படவில்லை. மாறாக, கோட்டையில் 10 தளங்களைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெறுகின்றன. இந்த 10 மாடி கட்டடத்தில் ஏற்கெனவே 32 அரசுத் துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தத் துறைகளில் எரிசக்தி, சமூகநலத் துறை போன்ற சில துறைகள் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் மாறுகின்றன. இதனால் ஏற்படும் காலியிடங்களில் கோட்டையின் பிரதான கட்டடத்தில் இயங்கி வந்த மூன்று அரசுத் துறைகளை (நிதி, நீதி, பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை) இடம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பயன்பாட்டைத் தடுக்க: அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் மாறியுள்ளனர். இந்த நிலையில், மூன்று தளங்களைக் கொண்ட கோட்டையின் பிரதான கட்டடத்தின் பயன்பாட்டைத் தவிர்க்க அதை தொல்பொருள் ஆய்வுத் துறையிடமே மீண்டும் ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கோட்டையில் சட்டப் பேரவை மண்டபம், செம்மொழித் தமிழாய்வு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. கோட்டைக் கட்டடம் தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், நூலகத்துக்கு வேறு இடத்தைத் தேடவும் அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
வரலாறு என்ன? டச்சுக் கம்பெனியின் அலுவலரான பிரான்சிஸ் டே என்பவரும் மற்றவர்களும் சென்னையை அடைந்தனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் ஃபோர்ட் ஹவுஸ் என்ற ஒரு சிறிய கட்டடத்தை, டே பெருமளவு தனது சொந்தப் பணத்தை செலவழித்துக் கட்டினார். 1640-ல் புனித ஜார்ஜ் தினமான ஏப்ரல் 23-ல் அந்தக் கட்டடம் முடிக்கப்பட்டதால் அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.