நீதிமன்றத் தீர்ப்பை மீறும் பணியாளர் தேர்வாணையம்: தமிழக அரசு அதிர்ச்சி
சென்னை, பிப். 21: திறந்தநிலை பல்கலைக்கழக பட்டப் பிரச்னையில் அரசு உத்தரவையும், நீதிமன்றத் தீர்ப்பையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மீறி வருவதால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அரசுத் துற
சென்னை, பிப். 21: திறந்தநிலை பல்கலைக்கழக பட்டப் பிரச்னையில் அரசு உத்தரவையும், நீதிமன்றத் தீர்ப்பையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மீறி வருவதால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
அரசுத் துறைகளில் பதவி உயர்வுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ இதன்பின் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், பள்ளிப் படிப்பை முடிக்காமல் நேரடியாக திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் பெறும் பட்டங்கள் ஏற்கப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
தீர்ப்பைத் தொடர்ந்து, அரசுத் துறைகளில் குறிப்பாக தலைமைச் செயலகம் போன்ற இடங்களில் இது கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் செல்லாது என்பது குறித்த உத்தரவை, பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறையும் வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவால், பள்ளிப்படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பதவி உயர்வு கிடைத்த சட்டப் பேரவைச் செயலக, தலைமைச் செயலக ஊழியர்களில் சிலர் பதவி இறக்கம் செய்யப்பட்டு மீண்டும் பழைய இடத்திலேயே நியமிக்கப்பட்டனர்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்: அரசின் அனைத்துத் துறைகளிலும் நீதிமன்ற, பணியாளர் - நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மட்டும் அது இதுவரை அமல்படுத்தப்படவில்லை. பணியாளர் தேர்வாணையத்தில் பள்ளிப்படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற ஊழியர்களில் சிலருக்கு ஏற்கெனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இந்த பதவி உயர்வு விஷயம் முடிவதற்குள்ளாக, மேலும் மூன்று பேருக்குப் பதவி உயர்வு அளிக்க வகைசெய்யும் கோப்புகள் தயாராகி வருகின்றன.
""திறந்தநிலை பட்டம் படித்த ஊழியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கும் விஷயத்தில் தேர்வாணையத்தின் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதனால், செயலாளர் விடுப்பில் சென்றுள்ளார்.
இந்த நிலையில், இணைச் செயலாளர் மூலமாகக் கோப்புகள் தயார் செய்யப்பட்டு ஆணையத்தின் தலைவர் மூலமாகப் பதவி உயர்வு அளிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன'' என தேர்வாணையத்தைச்
சுட்டிக்காட்டி பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வைணையத்தைப் போன்று, தங்களுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் படித்துள்ள தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு அதிர்ச்சி: நீதிமன்றத் தீர்ப்பை மீறும் அரசுப் பணியாளர் தேர்வைணையத்தின் தொடர் செயல்பாட்டு குறித்துத் தமிழக அரசு அதிர்ச்சி தெரிவித்துள்ளது. பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் உயரதிகாரிகள் பலரும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அதிருப்திக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தை அண்மையில் நாடிய தலைமைச் செயலக ஊழியர்கள் சிலர், ""பள்ளிப்படிப்பை முடிக்காமல் திறந்தநிலையில் பட்டம் பெற்றவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும்'' என்று வழக்குத் தொடர்ந்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், பதவி உயர்வுக்கு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் செல்லாது என்ற முந்தைய தீர்ப்பை உறுதி செய்தும் கடந்த வாரம் தீர்ப்புக் கூறியது.
தீர்ப்பு வெளிவந்த ஒரு வாரத்துக்கு உள்ளாக, பதவி உயர்வு அளிப்பதற்கான முயற்சியில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.