முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு தேவை!

திருவாரூர்,: தமிழகத்தில் விபத்து நஷ்டஈடு வழங்காததால், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதைத் தவிர்க்க அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 2:59 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:33 PM

திருவாரூர்,: தமிழகத்தில் விபத்து நஷ்டஈடு வழங்காததால், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதைத் தவிர்க்க அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 தமிழகத்தில் தனியார் மட்டுமே இயக்கி வந்த பேருந்து போக்குவரத்து, 1972-ம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டது. அப்போது தனியார்களிடமிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை 2,400 மட்டுமே.

 ஆனால், இன்று தமிழகம் முழுவதும் கும்பகோணம், மதுரை, கோவை, சேலம், விழுப்புரம், திருநெல்வேலி என 6 போக்குவரத்துக் கழகங்கள், சென்னை மாநகர், விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவை 21 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பேருந்துகளின் மொத்த எண்ணிக்கை 22,300.

Advertisement

 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நாளொன்றுக்கு 25 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் மட்டும் நாளொன்றுக்கு 2.25 கோடிப் பேர் பயணிக்கின்றனர். இதில் குறிப்பாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மட்டும் நாளொன்றுக்கு 44 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இது உலக சாதனை. இது நமக்கு பெருமை.

 ஆனால், இந்தப் பெருமையை சிறுமைப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்த நிதியாண்டு வரை அரசுப் பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துகளில் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 220 கோடி நஷ்ட ஈட்டை போக்குவரத்துக் கழகங்களால் வழங்க வேண்டியுள்ளது. அரசுப் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்ட ஈடு வழங்காததால், தமிழகம் முழுவதும் நீதிமன்ற உத்தரவின் மூலம் அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. திருவாரூரில் ஜப்தி செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட இரு அரசுப் பேருந்துகள் கடந்த 20 தினங்களுக்கும் மேலாக கேட்பாரற்று நீதிமன்ற வாசலிலேயே நிற்கின்றன. நாகையில் அண்மையில் ஓர் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து அதை மனுதாரரின் இல்லத்துக்கே கொண்டு சென்று நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறையில் திங்கள்கிழமையும், திருவாரூரில் செவ்வாய்க்கிழமையும் தலா ஓர் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று தமிழகம் முழுவதும் தினந்தோறும் இந்த ஜப்தி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்குக் காரணம் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படாதது தான்.

 இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சம்மேளன (ஏஐடியுசி) மாநில பொதுச் செயலர் ஜெ. லட்சுமணன் கூறியது:

 முந்தைய திமுக அரசு தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்ய முயற்சித்தது. அது தொழில்சங்கங்கள் மூலம் தடுக்கப்பட்டது. பிறகு, 60 சதம் பொதுத் துறை மற்றும் 40 சதம் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அது நிறைவேறவில்லை.

 அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததற்கு கூறப்படும் காரணம் அனைத்துப் பேருந்துகளும் விபத்துகளில் சிக்குவதில்லை. அனைத்துப் பேருந்துகளுக்கும் காப்பீடு செய்து முறையாக பிரீமியத் தொகை கட்டினால் அது கழகத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, விபத்துக்குளானவர்களுக்கு கழகமே நேரடியாக நஷ்ட ஈட்டுத் தொகையைச் செலுத்தலாம் என்பதுதான். ஆனால், இது சரியான வாதம் அல்ல.

 அரசுப் பேருந்துகளை காப்பீடு செய்ய புதிய அரசு உரிய அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் தொழில்சங்கங்களின் கோரிக்கை என்றார் அவர்.

 இரு சக்கரம் முதல் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என்பது விதி. காப்பீடு செய்யாத வாகனங்களை போக்குவரத்து துறை அலுவலர்களும், காவல் துறையினரும் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால், அனைத்துக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டிய அரசு, தனக்குச் சொந்தமான நிறுவனத்தின் வாகனங்களை (பேருந்துகள்) காப்பீடு செய்யாமல் இயக்குவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்று பேருந்து ஜப்திகள் தொடர்ந்தால், சாலையில் இயக்க போதிய பேருந்துகள் இருக்காது என்ற நிலைதான் ஏற்படும். போக்குவரத்துக் கழகங்களுக்கு வருமானம் குறையும், மேலும் அரசின் மீதும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மீதும் பொதுமக்களுக்கு பெரும் அதிருப்திதான் ஏற்படும்.

 எனவே, அரசுப் பேருந்துகளை காப்பீடு செய்து, ஜப்தி நடவடிக்கைளிலிருந்து தவிர்த்துக் கொண்டு, சீரான மக்கள் சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து ஆற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.