பாலிடெக்னிக் தேர்வு முடிவு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுமா?
சென்னை: பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடும் முறையில் மாற்றம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. டிப்ளமோ படிப்புகளை பொருத்தவரை பாடத் திட்டங்களை வகுப்பது, தேர்வுகளை நடத
சென்னை: பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடும் முறையில் மாற்றம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.
டிப்ளமோ படிப்புகளை பொருத்தவரை பாடத் திட்டங்களை வகுப்பது, தேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
டிப்ளமோ படிப்பை மேற்கொள்ளும் மாணவர், முந்தைய பருவங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாத நிலையில் இறுதிப் பருவமான 6-வது பருவத்திலுள்ள அனைத்துப் பாடங்களையும் தேர்ச்சி பெற்ற போதும், அவர்களுக்கான தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத்தான் அறிவிக்கப்படும். எந்த பாடத்தின் மதிப்பெண்ணையும் அவர் தெரிந்துகொள்ள முடியாது.
Advertisement
சம்பந்தப்பட்ட மாணவர், தான் படித்த கல்லூரி மூலம், சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்த பின்னர்தான், நிறுத்தி வைக்கப்பட்ட அவருடைய தேர்வு முடிவு வெளியிடப்படும். அதன்பிறகே தன்னுடைய இறுதிப் பருவ பாடங்களுக்கான மதிப்பெண்களையும் மாணவர் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நடைமுறையால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேர்வு முடிவுகள் தெரியாததால், பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு படிப்புகளில் சேர முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த ஹரிஹரன் என்ற மாணவர், 4-ம் பருவத்தில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 2010 ஏப்ரலில் இறுதிப் பருவத் தேர்வுகளை எழுதிய பின்னர், அக்டோபரில் தேர்ச்சிப் பெறாத பாடத்துக்கான தேர்வையும் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் 6-ம் பருவத் தேர்வு முடிவு 2010 ஜூலையில் வெளியிடப்பட்டபோது, ஹரிஹரனுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. பின்னர் 4-ம் பருவத்துக்கான பாடத் தேர்வின் முடிவு 2011 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அதன் பிறகும் இவருடைய 6-ம் பருவ தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவே இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரியில் ஹரிஹரன் புகார் தெரிவித்தபோது, விரைவில் வெளியிட்டுவிடுவார்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகும் மூன்று மாதங்களாக தேர்வு முடிவு வெளியிடப்படாததை அடுத்து, மீண்டும் கல்லூரியை ஹரிஹரன் அணுகியுள்ளார். அப்போதுதான் குறிப்பிட்ட படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தால்தான், நிறுத்திவைத்துள்ள தேர்வு முடிவை வெளியிடுவார்கள் எனக் கூறியுள்ளனர்.
அதன்படி ஜூன் முதல் வாரத்தில் விண்ணப்பித்த அவருக்கு, இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.
இவரைப்போல் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர் அரசு உள்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 23-ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்துவிட்டதால், இவர்கள் அனைவரும் அதற்கு விண்ணப்பிக்க இயலாமல் ஓராண்டு வீணாகியுள்ளது.
மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், பட்டப் படிப்புகளுக்கு உள்ளதுபோல், அந்தந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுக்கப்பட வேண்டும். அதனுடன் படிப்பை முடித்ததற்கான சான்றிதழும் கொடுக்கப்பட வேண்டும்.
பின்னர் உரிய படிவத்தில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்த பின்னர், டிப்ளமோ சான்றிதழை கொடுக்கலாம். இந்த வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் மேற்படிப்பை மேற்கொள்வதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பெற்றோரும், கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.