வாழ்வாதாரத்தை இழந்து தடுமாறும் பாலமலை ஆதிவாசிகள்: அரசின் கருணைப் பார்வை கிடைக்குமா?
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பாலமலையில் காட்டு விலங்குகளின் தொல்லையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆதிவாசிகள், பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், பெரியநாய
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பாலமலையில் காட்டு விலங்குகளின் தொல்லையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆதிவாசிகள், பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பாலமலை, புகழ்பெற்ற வைணவத் தலமாகும். இங்குள்ள ரங்கநாதர் கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இம்மலையில் பூர்வக் குடியினராக இருளர் எனப்படும் ஆதிவாசிகள் வசிக்கின்றனர்.
இம்மலையில் சில கிமீ. தூரத்துக்குள் மாங்குழி, பெரும்பதி, பெருக்கைபதி, பெருக்கைபதி புதூர், பசுமணி, பசுமணிப்புதூர், குஞ்சூர்பதி உள்ளிட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கேள்விக்குறியான விவசாயம்: கால்நடை வளர்ப்பு, சிறுதானிய சாகுபடி ஆகியவை இவர்களது தொழில்கள். ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் விவசாயத்தை முற்றிலும் கைவிட்டு விட்டனர்.
நெடுங்காலமாக இங்கு வசிப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கென அரசு சார்பில் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தினை, ராகி, சோளம், கேழ்வரகு, அவரை போன்றவற்றை பயிரிட்டு வந்தனர். சில ஆண்டுகளாக இங்கு யானைகளின் தொல்லை அதிகமாகிவிட்டது.
இதனால் அச்சமுற்ற ஆதிவாசிகள் விவசாயம் செய்வதில்லை; வனத்துறையினரும் அடிக்கடி கெடுபிடி செய்ததால் போக்கிடம் தெரியாமல் திண்டாடினர். இதனால் தற்போது இவர்கள் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் கூலிவேலை செய்கின்றனர். சொந்த நிலமிருந்தும் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இடியும் நிலையில் வீடுகள்: இங்கு அரசு சார்பில் சிலருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. கதவுகளும் உறுதியானதாக இல்லை. இதனால் உணவு தேடி வரும் யானைகளால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
இங்குள்ள தென்னை மரங்களை ஒடித்துத் தள்ளும் காட்டு யானைகள் சில சமயங்களில் இரவில் வீட்டு வாசல்களின் முன்பு நின்று கொள்கின்றன. இந்த நேரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் வீடுகளில் மக்கள் பயத்துடன் முடங்கிக் கிடக்கவேண்டியுள்ளது. தங்களுக்கு உறுதியான புதிய வீடுகளை அரசே கட்டித்தர வேண்டும் என்பது ஆதிவாசிகளின் வேண்டுகோள்.
பலனளிக்காத அடிப்படை வசதிகள்: விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் அரசு நிதியின் கீழ் பெருக்கைபதி, மாங்குழி உள்ளிட்ட கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன. இதில் பெருக்கைபதியில் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெட்டப்பட்ட குளம் காணாமலே போய்விட்டது. இக்கிராமத்தின் அருகில் உயர்மட்ட குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டது. அதுவும் பயன்படுத்தப்படாமல் வீணாகிவிட்டது.
பெரும்பாலான மலைவாசிகள் வேலைக்காக அடிவாரத்திற்கு வரவேண்டியுள்ளது. இதற்காக தனி நபர்கள் சிலர் இயக்கும் ஜீப்களில் ரூ. 20 கட்டணமாக கொடுத்து சென்று வர வேண்டியுள்ளது. அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றப்படுவதால் விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.
தங்கள் பிரச்னைகள் குறித்து மலைவாசிகள் கூறியது:
நாங்கள் மீண்டும் விவசாயம் செய்ய அரசு உதவ வேண்டும். காட்டுயானைகளால் தாக்கப்படும் நிலையைத் தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிச் சான்றிதழ், மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி பயில உரிய உதவிகள் உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் ஆதிவாசிகளுக்கென நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். பழுதடைந்துள்ள வீடுகளை புதிதாகக் கட்டிக்கொள்ள நிதியுதவி அளிக்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் இளைஞர்கள் இங்கு உள்ளனர். இவர்களுக்கு போதிய தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும். மருத்துவ வசதிக்கென கோவனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.
மீண்டும் மறுவாழ்வு கிடைக்குமா? இதுசம்பந்தமாக வனத்துறையினர் கூறியது:
ஆதிவாசிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு நிதியுதவியுடன் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு சுயதொழில் செய்ய கடனுதவியும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. யானைகள் ஊருக்குள் புகுவதைக் தடுக்க வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வன அதிகாரிகள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். மோசமான ஜீப்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
ஆதிவாசிகளுக்கு தரமான வாழ்க்கைச் சூழலை அளிப்பது அரசின் கடமை. இயற்கையை மனிதன் அழிப்பதால் உருவாகும் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தடுக்க சிலரால் மட்டுமே முடியாது. வனத்துறை, காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகம், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், பழம்பெருமை மிக்க பாலமலையையும், அதை நம்பியுள்ள ஆதிவாசி மக்களையும் காக்க முடியும்.