தமிழ்நாடு

பாரா மெடிக்கல் டெக்னீஷியன்களுக்கு அரசுப் பணிவாய்ப்பு கிடைக்குமா?

மதுரை, ஜூலை 7: அரசு மருத்துவமனைகளில் 19 சிகிச்சைத் துறைகளில் நியமிக்க தகுதி பெற்ற பாரா மெடிக்கல் டெக்னீஷியன்கள் பட்டயப் படிப்பு முடித்தோருக்கு, அரசு பணி வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூலை 7: அரசு மருத்துவமனைகளில் 19 சிகிச்சைத் துறைகளில் நியமிக்க தகுதி பெற்ற பாரா மெடிக்கல் டெக்னீஷியன்கள் பட்டயப் படிப்பு முடித்தோருக்கு, அரசு பணி வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 மருத்துவத்தில் மயக்கவியல் துறை, இருதயத் துறை, நரம்பியல் துறை, சிறுநீரகவியல் துறை ஆகியவற்றில் டாக்டர்களுக்கு அடுத்தபடியாக, மருத்துவ சாதனங்களைக் கையாண்டு பரிசோதனை விவரங்களைத் துல்லியமாகக் கணிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்கள் செயல்படுவர். மேலும், அறுவைச் சிகிச்சை அறைகளிலும் இந்த வகையான பணியாளர்கள் அவசியம். ஆனால், இந்த வகையான பணியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவ அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இதனால், முறையான பரிசோதனைகள் நடைபெறவில்லை என்ற புகார்கள் எழுந்தன. மேலும், போலி டாக்டர்கள் செயல்படுவதாக புகாரும் எழுந்தது. இதையடுத்து, மருத்துவச் சாதனங்களைக் கையாளும் உதவி நிலை பணியாளர்களுக்கும் முறையான பயிற்சி அளித்து சான்றிதழ் அளிக்கவேண்டும் என சுகாதாரத் துறை தீர்மானித்தது.

 அதனடிப்படையில், கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு சுகாதாரத்துறை சார்பில், மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்தும் ஏழை எளிய நோயாளிகளுக்காக 24 மணி நேரம் செயல்படும் என்றும், அதையடுத்து தேவையான மெடிக்கல் டெக்னீஷியன்கள் நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாரா மெடிக்கல் டெக்னீஷியன்களுக்கான பயிற்சி பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. மதுரை, நெல்லை, சென்னை என அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் இப்பட்டயப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

 கற்பித்தல் ஓராண்டும், 3 மாத காலப் பயிற்சியும் பெற்று சான்று வழங்கப்பட்ட பாரா மெடிக்கல் டெக்னீஷியன் பிரிவில், இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று சான்றிதழையும் பெற்றுள்ளனர்.

 மாநில அளவில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 16 அறுவைச் சிகிச்சை அறைகள் உள்ளன. 60-க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைத் துறைகள் உள்ளன. இங்கு, 30-க்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் தேவையாக உள்ளது என்பதே மருத்துவர்களது கருத்து. அதேபோல, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 12 அறுவைச் சிகிச்சை அறைகள் உள்ளன. அங்கு 20-க்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் தேவை எனக் கூறப்படுகிறது. மாநில அளவில் பாரா மெடிக்கல் டெக்னீஷியன்களது மொத்தத் தேவையில் தற்போது 2 சதவீதத்தினர் மட்டுமே உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

 கடந்த 5 ஆண்டுகளில் மெடிக்கல் டெக்னீஷியன்களுக்கான பட்டயப் படிப்பை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முடித்து சான்று பெற்று, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். ஆனால், இப்பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்படவேண்டிய இடத்தில், ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் தாற்காலிகப் பணியில் இருந்த துப்புரவுப் பணியாளர், நோயாளிகளின் வண்டி தள்ளுவோரை 3 மாதச் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் என சான்றிதழ் அளித்து, மெடிக்கல் டெக்னீஷியன்களாக நியமித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

 இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் போதிய முறையான மெடிக்கல் டெக்னீஷியன்களுக்கான பயிற்சியைப் பெற்றவர்கள் அல்ல என்றும் கூறப்படுகிறது. அந்தந்த சிகிச்சைத் துறையின் டாக்டர்களது தனிப்பட்ட வேலையாள்களாக இருந்தவர்களே 3 மாதப் பயிற்சி எனும் பெயரிலான சான்றிதழ் பெற்று, அரசு மருத்துவமனைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர, அவசரமாக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சிறப்புப் பயிற்சி படிப்பு என்பதால், அந்தப் பயிற்சியை முடித்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என்றும், அப்பயிற்சியில் சான்று பெற்றவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

 அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளிலும் பாரா மெடிக்கல் டெக்னீஷியன்களுக்கு போதிய பணி வாய்ப்பு வழங்கப்படுவதில்லையாம். ஆகவே, அரசு மருத்துவமனைப் பணியிடங்களில் மட்டுமே பணியில் சேரவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என்கிறார் இப்பட்டயப் படிப்பை முடித்துள்ள மதுரையை சேர்ந்த நிர்மலா.

 இது குறித்து, கடந்த 5 ஆண்டுகளில் மாநில முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் என பலரிடமும் முறையிட்டும், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை என்பதும் டெக்னீஷியன்களது ஆதங்கமாகும். ஆகவே, அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை அரங்கு, உறைமாவு கட்டுமிடம், வார்டு பணிகள் உள்ளிட்ட இடங்களில் தங்களை நியமிக்கவேண்டும் என்பதும் இந்தப் பட்டயப் படிப்பு முடித்தோரது கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT