முகப்பு
தமிழ்நாடு

திருந்திய நெல் சாகுபடியில் காவிரி டெல்டா விவசாயிகள் ஆர்வம்

திருவாரூர் : காவிரி டெல்டா விவசாயிகள் நிகழ் குறுவை பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறையில் அதிக அளவில் சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.  திருந்திய நெல் சாகுபட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:03 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:37 PM

திருவாரூர் : காவிரி டெல்டா விவசாயிகள் நிகழ் குறுவை பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறையில் அதிக அளவில் சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

 திருந்திய நெல் சாகுபடி முறை என்பது ஒற்றை நாற்றை முக்கால் அடிக்கு முக்கால் அடி சதுர இடைவெளியில் நடுவதுதான். இந்த முறையிலான சாகுபடி மடகாஸ்கர் நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நல்ல பலனை தந்துள்ளது. இதில் சில தொழில்நுட்ப முறைகளை வேளாண் துறை வகுத்து, 2003-2004-ம் ஆண்டில் தமிழகத்தில் இந்த முறையிலான சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது.

 இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் குறுவை, சம்பா ஆகிய பருவங்களில் மொத்த சாகுபடி பரப்பில் 20 முதல் 30 சதம் வரை திருந்திய நெல் சாகுபடியை மேற்கொள்ள வேளாண் துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், இதுவரையில் இலக்கு எட்டப்படவேயில்லை.

Advertisement

 நிகழாண்டில், குறுவை சாகுபடிக்கு வழக்கமான நாளுக்கு முன்னதாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி வழக்கமான பரப்பைவிடக் கூடுதலாக நடைபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

 இந்நிலையில், நிகழாண்டில் குறுவைப் பருவத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ஏறத்தாழ 75 சதம் அளவுக்கு திருந்திய நெல் சாகுபடி முறையின் கீழ் நெல் சாகுபடி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

 குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் இந்த முறையிலான சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் விரும்பியுள்ளதும், வேளாண் துறையினரின் ஊக்குவிப்பே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

 தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இயல்பான பரப்பு 40,000 ஹெக்டேர். நிகழாண்டுக்கு 42,500 ஹெக்டேர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 10,000 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன. இதில் திருந்திய நெல் சாகுபடி முறையிலான நடவு 5,014 ஹெக்டேர். தற்போது வழக்கமான முறையிலான சாகுபடிக்கு 9,380 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்யத் தேவையான நாற்றுகளும், திருந்திய நெல் முறையிலான சாகுபடிக்கு 13,400 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்யத் தேவையான நாற்றுகளும் விடப்பட்டுள்ளன.

 திருவாரூர் மாவட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 36,000 ஹெக்டேர். நிகழாண்டுக்கான இலக்கு 40,000 ஹெக்டேர். இதுவரை 15,000 ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது. இதில் 5,310 ஹெக்டேர் திருந்திய நெல் சாகுபடி முறையிலான நடவு. தற்போது வழக்கமான முறையிலான சாகுபடிக்கு 10,000 ஹெக்டேரில் நடவு செய்யத் தேவையான நாற்றுகளும், திருந்திய நெல் முறையிலான சாகுபடிக்கு 20,000 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்யத் தேவையான நாற்றுகளும் விடப்பட்டுள்ளன.

 நாகை மாவட்டம்: நாகை மாவட்டத்தில் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 35,000 ஹெக்டேர். நிகழாண்டுக்கான இலக்கு 40,000 ஹெக்டேர். இதுவரையில், 28,880 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன.

 இதில் 16,200 ஹெக்டேர் திருந்திய நெல் சாகுபடி முறையிலான நடவு. தற்போது வழக்கமான முறையிலான சாகுபடிக்கு ஏறத்தாழ 11,000 ஹெக்டேரில் நடவு செய்யத் தேவையான நாற்றுகளும், திருந்திய நெல் சாகுபடிக்கு 11,000 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்யத் தேவையான நாற்றுகளும் விடப்பட்டுள்ளன.

 இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் கூறியது:

 திருந்திய நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது. வழக்கமான முறையிலான சாகுபடிக்கு வேளாண் துறை ஏக்கருக்கு 24 கிலோ விதை பரிந்துரைத்தாலும், விவசாயிகள் 30 முதல் 50 கிலோ வரையில் விதையைப் பயன்படுத்துகின்றனர்.

 திருந்திய நெல் சாகுபடி முறையில் முக்கால் அடிக்கு முக்கால் அடி சதுர பரப்பில் ஒரு நாற்று மட்டுமே நடவு செய்யப்படுகிறது. இந்த ஒரு நாற்றிலிலேயே தூர்கள் அதிக அளவு வெடித்து 80 கதிர்கள் வரை வெளிவரும்.

 மேலும், தண்ணீரும் 50 சதம் மீதமாகும். களை எடுக்கும் பணிக்கு ஏக்கருக்கு ஒர் ஆள் கோனோவீடர் கருவியை வைத்துக் கொண்டு எடுத்து விடலாம். நாற்று பறிக்கும் செலவில் 75 சதத்துக்கு மேல் மிச்சமாகும்.

 வழக்கமான சாகுபடி முறையைவிட திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செலவு ஏறத்தாழ ஏக்கருக்கு ரூ.4,000 அளவுக்கு குறையும். அதேபோல, தொழில்நுட்ப முறைகளை முழுமையாகப் பின்பற்றினால் மகசூலும் ஏக்கருக்கு 4 டன்கள் வரை கிடைக்கும்.

 திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண் துறை வழங்கி வருகிறது என்றார் மயில்வாகணன்.

 காவிரி டெல்டா பகுதியில் போதிய அளவுக்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காதது, ஆள் கூலி, இடுபொருள்கள் விலை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டுவதற்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.