முகப்பு
தமிழ்நாடு

டாக்டராக வேண்டாம், என்ஜினீயராகிறோம்

சென்னை, ஜூலை 10: மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று பல மாணவர்கள் ஏங்குகிறார்கள். ஆனால், மருத்துவப் படிப்பில் சேருவதற்குக் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டுப் பொறியியல் படிப்பில் சேர

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:05 AM
பகிர்:

சென்னை, ஜூலை 10: மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று பல மாணவர்கள் ஏங்குகிறார்கள். ஆனால், மருத்துவப் படிப்பில் சேருவதற்குக் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டுப் பொறியியல் படிப்பில் சேர மூன்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கே. ராஜேஸ்வர் பாரதி என்ற மாணவர், மருத்துவ படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.50 பெற்று தரவரிசைப் பட்டியலில் 140-ஆவது ரேங்க் பெற்றிருந்தார்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வில் அவருக்குச் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. ஆனால், மருத்துவப் படிப்புக்காகக் கிடைத்த வாய்ப்பை உதறிவிட்டுத் தற்போது பொறியியல் படிப்பில் சேர அவர் முடிவு செய்துள்ளார்.

Advertisement

இதுபோல் 196.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் மருத்துவ தரவரிசை பட்டியலில் 2320-வது இடத்தையும், வகுப்புவாரி பிரிவின் கீழ் 435-வது இடத்தையும் பெற்றிருந்த கே. அபினயாவுக்கு மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

மருத்துவத் தர வரிசையில் 2948-வது இடத்தையும், வகுப்புவாரி பிரிவின் கீழ் 131-வது இடத்தையும் பெற்றிருந்த பி. பிரசாந்த்துக்குத் திருச்சியில் உள்ள கே.ஏ.பி.வி. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பொறியியல் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களுடைய விவரங்கள் மருத்துவக் கல்வித் தேர்வுக் குழு அலுவலகத்திலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர் பொறியியல் கலந்தாய்வில் மூவரும் பங்கேற்றுப் பொறியியல் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இந்த விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவக் கல்வித் தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டிலும் 3 மாணவர்கள் மருத்துவப் படிப்பை உதறிவிட்டுப் பொறியியலில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்பில் சேர 69 இலங்கை அகதிகள் விண்ணப்பம்: தமிழக அரசின் அனுமதியின் பேரில் கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அகதிகள் பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.இலங்கையிலிருந்து இங்கு வரும் அகதிகள் வரும் குறைந்தபட்சம் 5 ஆண்டு பள்ளி படிப்பை தமிழகத்தில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நடப்புக் கல்வியாண்டில் கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக 69 இலங்கை அகதிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.