தமிழ்நாடு

வாகனங்களுக்கும் வந்தது ஆபத்து!

உதகை: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களிலிருந்து டயர் மற்றும் பேட்டரி  போன்றவற்றை திருடிச் செல்வது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள

ஏ. பேட்ரிக்

உதகை: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களிலிருந்து டயர் மற்றும் பேட்டரி

 போன்றவற்றை திருடிச் செல்வது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

 சமவெளிப் பகுதிகளில் இரவு நேரங்களில் அவரவர் வீட்டு வளாகத்தில் அல்லது அவரவர் வசதிக்கேற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். இத்தகைய நிலை மலை மாவட்டமான நீலகிரியில் இல்லை.

 ஏனெனில் இரவு நேரங்களில் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டால் அடுத்த நாள் காலையில்தான் அவற்றை வந்து பார்ப்பர். அத்துடன் சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப்பகுதிக்கு வரும் வாகனங்களும் இரவு நேரத்தில் மலைப்பாதையிலேயே நிறுத்திவிட்டு அடுத்த நாள் காலையில்தான் திரும்பிச் செல்வர்.

 இத்தகைய சூழ்நிலைகளை சமூக விரோதிகள் சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பாதிப்புக்குள்ளாவோர் சுற்றுலாப் பயணிகளே.

 வெளி மாவட்ட அல்லது வெளி மாநில வாகனங்கள் இரவு நேரங்களில் ஆளில்லாமல் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தால் அவற்றிலிருந்து டயர், பேட்டரி, கதவைத் திறக்க முடிந்தால் உள்ளேயுள்ள டேப் ரிகார்டர் உள்ளிட்டவைகளையும் கழற்றிச் சென்று விடுகின்றனர். அடுத்த நாள் காலையில்தான் இவற்றை அந்த வாகன ஓட்டிகள் அறிய முடியுமென்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பெரும்பாலும் புகார் கொடுப்பதில்லை. அதையும் மீறி புகார் கொடுத்தாலும் அதற்கான நேரடி விசாரணைக்கும் அவர்கள் வர வேண்டியிருக்கும் என்பதால் பெரும்பாலும் அதையும் தவிர்த்து விடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளை சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 இத்தகைய சம்பவம் நீலகிரி மலைப்பாதையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி வழியாக உதகை செல்லும் சாலையிலும், குன்னூர் வழியிலான சாலையிலும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் இத்தகைய செயல்களில் சாலைப் போக்குவரத்து குறித்து நன்கு பழக்கப்பட்டவர்களே ஈடுபடுவதாகத் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.

 இதேபோல, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி நெடுஞ்சாலையில் அரவேணு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு

 வாகனத்திலிருந்து நள்ளிரவில் டயர் கழற்றப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்தவர்கள் டயர் கழற்றப்பட்ட வாகனத்தையும், அதை கழற்றிய வாகனத்தையும் பார்த்து அவர்களது சொந்த வாகனம் என்றே நினைத்துச் சென்றுள்ளனர்.

 இதையடுத்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தியபோது அந்த நேரத்தில் இயங்கும் வாகனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பேரில் அந்த வாகனம் கூடலூரிலிருந்து கோவை வரை இயங்கும் வாகனம் என்பது தெரியவந்தது. அதையடுத்து காவல்துறையினர் கூடலூருக்கு சென்று விசாரித்தபோது அந்த வாகனத்தின் டிரைவர்தான் டயரை கழற்றி திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பின்னர் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 4 டயர்களும், 2 பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டன. அந்த வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார், உதவியாளர் தலைமறைவாகிவிட்டார்.

 மீட்கப்பட்ட டயர்கள் மற்றும் பேட்டரியின் மதிப்பு ரூ.36,000 எனக் கூறப்பட்டாலும், தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் பல லட்சம் மதிப்பிலான டயர்கள் மற்றும் பேட்டரிகளை தொடர்ந்து திருட்டுபோவது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 எனவே இரவு நேரங்களில அதிகளவில் வாகனங்களோ அல்லது மனித நடமாட்டமோ இல்லாத நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணிகளில் காவல் துறையினரும், ஹை வே பேட்ரோலிங் பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பதே நீலகிரி மாவட்டத்திலுள்ள வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT