இடங்களை நிரப்பத் திணறும் பொறியியல் கல்லூரிகள்!
சென்னை, ஜூலை 26: நூற்றுக்கும் மேற்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிலான இடங்களை நிரப்ப முடியாமல், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை இதுவரை அரசிடம் ஒப்படைத்துவிட்ட
சென்னை, ஜூலை 26: நூற்றுக்கும் மேற்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிலான இடங்களை நிரப்ப முடியாமல், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை இதுவரை அரசிடம் ஒப்படைத்துவிட்டன.
புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகள் தங்களைப் பற்றி மாணவர்களிடம் விளம்பரப்படுத்த போதிய அவகாசம் இல்லாததால் 100% இடங்களையும் அரசிடமே ஒப்படைத்துவிட்டதாகத் தெரிகிறது. தகவல் தொழில்நுட்பவியல் (ஐ.டி.), சிவில் என்ஜினீயரிங் படிப்பகளில் மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாததால் அந்த இடங்களை நிரப்ப முடியாமல் சுயநிதிக் கல்லூரிகள் திணறுகின்றன.
அதைவிட முக்கியம் சமீபத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அடைந்த தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் கல்லூரிகள் தரம் பிரிக்கப்பட்டன. இதைப் பார்த்த மாணவர்கள் குறைந்த தேர்ச்சி உடைய கல்லூரிகளில் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் இடம் கிடைத்தும்கூட சேர மறுத்துவருகின்றனர்.
Advertisement
இந்தக் காரணங்களால்தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
29 புதிய கல்லூரிகள்: நடப்பு ஆண்டில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தொடர்ந்து அனுமதி அளித்து வருவதால், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் பொறியியல் இடங்களின் எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஜூலை 26-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 29 புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து சில புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பதால், பொறியியல் இடங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்தாய்வு தொடங்கி 19 நாள்கள் ஆகியுள்ள நிலையில் 30,587 இடங்கள் உள்ள இ.சி.இ. பிரிவில் 11,336 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 24,156 இடங்கள் உள்ள மெக்கானிக்கல் பிரிவில் 8,348 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
25,915 இடங்கள் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 7,291 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அதேநேரம், 16,149 இடங்கள் உள்ள பி.இ. சிவில் பிரிவில் 3,706 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 5,279 இடங்கள் உள்ள ஐ.டி. பிரிவில் 4,085 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.