தமிழ்நாடு

நிறைவேறுமா பெரும்பள்ளம்-நஞ்சை ஊத்துக்குளி பாசனத் திட்டம் ?

ஈரோடு: காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன திட்டம், உரிய பராமரிப்பின்றி பாழாகிக் கிடக்கிறது. இதனால் நன்செய் நிலங்களாக இருந்த சுமார் 2,500 ஏக்கர் விளை நிலம் வறண்ட பூமியாகிவிட்டது. கீழ்பவானி

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு: காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன திட்டம், உரிய பராமரிப்பின்றி பாழாகிக் கிடக்கிறது. இதனால் நன்செய் நிலங்களாக இருந்த சுமார் 2,500 ஏக்கர் விளை நிலம் வறண்ட பூமியாகிவிட்டது.

கீழ்பவானி பாசனப் பிரதான கால்வாயிலிருந்து வரும் கசிவு நீரைச் சேகரித்து பாசனத்திற்குப் பயன்படுத்தும் வகையில் ஈரோடு பெரும்பள்ளம் என்ற இடத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1964-ம் ஆண்டில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் இருந்து பெரும்பள்ளம்-நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசன திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் காசிபாளையம், வெண்டிபாளையம், 46 புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டம்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.

இந்த பாசன திட்டத்தில் பயன்பெறும் விவசாய நிலங்களில் 60 சத அளவு நஞ்சை ஊத்துக்குளி கிராமத்தில் உள்ளது. இதனால் இந்த திட்டத்திற்கு "பெரும்பள்ளம்-நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசன திட்டம்' என்று பெயரிடப்பட்டது.

1990-ம் ஆண்டுவரை இப்பகுதி விவசாய நிலங்களை வளம் கொழிக்கச்செய்த இந்தப் பாசன வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளாகப் பயனற்றுக் கிடக்கிறது. அணைக்கட்டு மற்றும் பிரதான வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும், வாய்க்கால்களை தூர்வாரி பராமரிக்காததாலும், இந்த பாசனத் திட்டத்தால் நஞ்செய் நிலங்களாக வளம் கொழித்த விவசாய நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறிவிட்டன.

இந்த பாசன திட்டத்தைச் செயல்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.43.75 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரித்து 2008-ம் ஆண்டு அரசுக்கு அனுப்பினர். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதுகுறித்து இந்தப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.என்.கைலாசம் தெரிவித்தது: இந்த அணைக்கட்டில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு அணைக்கட்டின் உயரத்தை மேலும் 5 அடி உயர்த்த வேண்டும். வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கீழ்பவானி பிரதான வாய்க்கால் கசிவு நீர்தான் இந்த பாசன திட்டத்தின் மூல ஆதாரம். இதனால் கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கும்போது, இந்த பாசன திட்ட சீரமைப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தது:

வாய்க்கால் மற்றும் நீர்தேக்கப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை அகற்றும்பட்சத்தில், பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று இடம் அளிக்கத் தயாராக இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அணைக்கட்டு மற்றும் வாய்க்கால்களைச் சீரமைக்க திருத்திய மதிப்பீடு வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த பாசனத் திட்டத்தை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்த ரூ.1 கோடி செலவாகும். இத்திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி அளித்தால், திருத்திய மதிப்பீடு தயாரித்த பிறகே பணிகள் தொடங்கப்படும் என்றார்.

பெரும்பள்ளம்-நஞ்சை ஊத்துக்குளி பாசன திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் முடங்கிப்போன 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT