முகப்பு
தமிழ்நாடு

குறுந்தொகைச் சிக்கல்களும் தீர்வுகளும்

அறிஞ்சிக்கலியின் இரண்டாம் பாடல் "இமையவில் ஈர்ஞ்சடை அந்தணன்' என்பது அதற்கு நச்சினார்க்கினியர் அழகிய உரை வரைந்துள்ளார். அதில் இருக்கும் வினையுவமப் போலியை விளக்கும்போது "நன்றே' என்னும் குறுந்தொகையும் வின

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:59 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:14 PM

அறிஞ்சிக்கலியின் இரண்டாம் பாடல் "இமையவில் ஈர்ஞ்சடை அந்தணன்' என்பது அதற்கு நச்சினார்க்கினியர் அழகிய உரை வரைந்துள்ளார். அதில் இருக்கும் வினையுவமப் போலியை விளக்கும்போது "நன்றே' என்னும் குறுந்தொகையும் வினையுவமப்போலி என்று குறித்துள்ளார்.

அவர் உள்ளறையுவமம் குறித்து விளக்கும் தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரைவரைந்துள்ள இடத்தும் "நன்றே' என்னும் செய்யுளை மேற்கோளாகக் காட்டவில்லை. மேலும், நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய கலித்தொகைப் பதிப்பில் அத்தகைய முதலுள்ள குறுந்தொகைச் செய்யுள் காணப்படவில்லை என்னும் அடிக்குறிப்புத் தரப்பட்டுள்ளது.

இக்காரணங்களால் அறிஞர் இராஜ சிவ. சாம்பசிவ சர்மா "நன்றே' எனத் தொடங்கும் செய்யுள் ஒன்று குறுந்தொகையைச் சார்ந்தது என்று முடிவுகட்டியுள்ளார்.

Advertisement

உண்மை நிலை என்ன? நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியுள்ள ஏனைய குறுந்தொகைப் பாடல்கள் எல்லாம் அந்நூலில் காணப்படும்போது, இந்த ஒரு பாடல் மட்டும் காணப்படவில்லை என்பது வியப்பளிப்பதாகும்.

காணாமற் போனவருக்கு வலக்கன்னத்தில் ஒரு மச்சம் உண்டு என்று தெரிவிக்கும் அடையாளம் அவரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுவதுபோல், இங்கும் பாடலைக் கண்டறிவதற்கு அப்பாடலில் உள்ளுறை இருக்கிறது என்னும் குறிப்பு துணைபுரிகிறது.

குறுந்தொகையில் "நன்றே' என்பது போன்று இடையில் னகரவொற்றைக் கொண்டு மூன்றெழுத்துகளால் ஆகிய முதற்சீரோடு தொடங்கும் பாடல்கள் மூன்று காணப்படுகின்றன. அவை "பொன்னே' (173) "இன்றே' (189) "ஒன்றே' 208 என்பன. இவற்றுள் முதலிரு பாடல்களில் உவமை இருக்கிறதே தவிர உள்ளுறை உவமம் இல்லை. எஞ்சிய 208-ஆம் பாடலைக் காணலாம்.

""ஒன்றே னல்லேன் ஒன்றுவென்; குன்றத்துப்

பொருகளிறு மிதித்த நெரிதான் வேங்கை

குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்

நின்றுகொய மலரும் நாடனொடு

ஒன்றேன் தோழி ஒன்றி னானே''

என்னும் கபிலர் பாடல், தலைமகள் வரைவிடை ஆற்றல் வேண்டுமென்ற தோழியை நோக்கிக் கூறும் துறையில் அமைந்துள்ளது.

இப்பாடலில் உள்ளுறை உள்ளது. அதனை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய அகத்திணையியல் 46-ஆம் நூற்பாவுரையில் பாடலை முழுமையாகத் தந்து விளக்கியுள்ளார். ""இக்குறுந்தொகை பிறிதொன்றன் பொருட்டுப் பொருகின்ற யானையால் மிதியுண்ட வேங்கை. நசையற ஓங்காது மலர் கொய்வார்க்கு எளிதாக நின்று பூக்கும் நாடன் என்றதனானே, தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான். எம்மை இறந்துபாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினான் எனவும், அதனானே நாமும் உயிர்தாங்கி இருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம்போல் எனவும் உள்ளத்தான் உவமம் கொள்ள வைத்தவாறு காண்க'' என்பதே அவர் வரைந்துள்ள உரை.

ஆதலால் குறிஞ்சிக்கலியின் இரண்டாம் பாடல் நச்சினார்க்கினியர் உரையில் உள்ள "நன்றே என்னும் குறுந்தொகையும் அது' என்பது "ஒன்றே னென்னும் குறுந்தொகையும் அது' என்று இருத்தல் வேண்டும்.

இஃது ஏட்டைப் படிப்பதில் நேர்ந்த பிழை. ஏட்டில் ஒகரத்திற்கும் நகரத்திற்கும் அதிக வேறுபாடின்றி இருந்ததுகொண்டு ஒகரத்தை நகரமாய்ப் படித்ததால் இப்பிழை நேர்ந்தது. அப்படியொரு பாடலே இல்லை. எனவே, "நன்றே' என்று தொடங்கும் குறுந்தொகைப்பாடல் ஒன்று உள்ளது என்பது சரியன்று.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.