முகப்பு
தமிழ்நாடு

வாகன விதிமீறல்களால் ஏற்படும் சாலை விபத்துகள்

திருவொற்றியூர், ஜூன் 12: புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சுங்கக் கட்டணச் சாலைகளில் தொடரும் விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.  இதனைத் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து விதிகள

தமிழ்நாடு

வாகன விதிமீறல்களால் ஏற்படும் சாலை விபத்துகள்

திருவொற்றியூர், ஜூன் 12: புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சுங்கக் கட்டணச் சாலைகளில் தொடரும் விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.  இதனைத் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து விதிகள

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:49 PM
பகிர்:

திருவொற்றியூர், ஜூன் 12: புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சுங்கக் கட்டணச் சாலைகளில் தொடரும் விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

 இதனைத் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து விதிகள், விபத்துகளைத் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

 நான்கு வழிச் சாலைகள் நன்றாக இருப்பதால், வாகனங்கள் வேகமாகச் செல்ல முடிகிறது. இதனால் பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளது.

 ஆனால் இந்த வேகமே பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

 இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பொறியாளர் பி.டி.மோகன் கூறியது: மோசமான நிலையில் இருந்த சாலைகள் இப்போது சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கேற்ற வகையில் போக்குவரத்து விதிகள், வாகன ஓட்டுனர்களிடையே தேவையான விழிப்புணர்வு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து தேவையான நடவடிக்கைகளை நாம் கடைப்பிடிக்கவில்லை என்பதை அதிகரித்துவரும் விபத்துகள் உணர்த்து

 கின்றன.

 சுங்கக் கட்டணச் சாலைகள் வாகனங்கள் 100 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் உறுதியாக உள்ளன. ஆனால் 80 கி.மீ வேகத்தில் சென்றால் மட்டுமே விபத்து ஏற்படும் சூழ்நிலையில் அதனைத் தவிர்க்க முடியும். ஆனால் நவீன ரக கார்களில் செல்பவர்கள் குறைந்தபட்சம் 100 முதல் 150 கி.மீ வேகத்தில்தான் செல்கிறார்கள்.

 மேலும் நான்கு வழிச் சாலைகளில் இடதுபுறம் 2 மீட்டர் தூரத்துக்கு இடம் இருக்கும். இதில்தான் இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் செல்ல வேண்டும். அதற்கு அடுத்தபடியாக கனரக வாகனங்களும், செண்டர் மீடியனை ஒட்டி வேகமாகச் செல்லும் வாகனங்களும், முந்திச் செல்லும் வாகனங்களும் செல்ல வேண்டும்.

 ஆனால் நடைமுறையில் இதற்கு நேர்மாறாகவே பெரும்பாலானோர் செல்கின்றனர். கனரக வாகனங்கள் வலதுபுறம் செல்கின்றன. திடீரென இடதுபுறம் திரும்புகின்றன. இவ்வாறு 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வாகனங்கள் திடீரென வலதுபுறமோ,இடதுபுறமோ திரும்பினால் சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகின்றன என்றார் மோகன்.

 சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: சுங்கக் கட்டணச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்த மையங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

 அங்கு ஓய்வு எடுக்க, சாப்பிட, குளிக்க என அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். ஆனால் அவை அங்கு இல்லை. இதை யாரும் கண்காணிப்பதும் இல்லை. எனவே சாலையோர உணவகங்கள், டீக்கடைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

 வேகமாக முந்திச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுடன் மோதுகின்றன. வழியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்குரிய ஒளிரும் ஒளிப்பான்கள், விளக்குகளை பின்புறம் வைக்க வேண்டும். இதனையும் யாரும் கடைபிடிப்பதில்லை. இது குறித்து வாகன ஓட்டிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

 சர்வீஸ் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்: சுங்கக் கட்டணச் சாலைகள் அமைக்கப்படும்போதே சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்படுகின்றன. உள்ளூர் வாகனங்கள் சென்றுவர இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

 ஆனால் இப்போது இச்சாலைகள் அனைத்தும் பராமரிப்பின்றி வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்கும் அவல நிலை ஏற்படுகிறது. சாலைகளை ஒட்டி எங்கு பார்த்தாலும் சட்டவிரோதமாக உணவகங்கள், டீக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவும் விபத்துக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

 ஜெட் வேகத்தில் ஆம்னி பேருந்துகள்: ஒரு காலத்தில் சுற்றுலா வாகனங்களாக இருந்த ஆம்னி பேருந்துகள் இப்போது ஜெட்வேக பேருந்துகளாக மாறி வருகின்றன.

 மேலும் பயணிகள், அவர்களின் லக்கேஜ் என்பது போய் முதலில் சரக்குகள் பின்னர்தான் பயணிகளுக்கு முக்கியத்துவம் என்ற அளவுக்கு சரக்கு லாரிகளாகவே ஆம்னி பேருந்துகள் மாறிவிட்டன என்பதுதான் உண்மை நிலவரம். பேருந்தின் கூரை, பின்புறம், இடது, வலது புறம் என எங்கு பார்த்தாலும் டயர்கள், நூல்கள், கூரியர் பார்சல்கள், பெயிண்ட் டப்பாக்கள், எண்ணெய் வகைகள் என அனைத்துப் பொருள்களும் ஏற்றப்படுகின்றன.

 தீப்பிடிக்கும் அபாயகரமான பொருள்கள் கூட எவ்வித அச்சமும் இன்றி பயணிகள் வாகனத்தில் ஏற்றுவதற்கு யார் அனுமதி கொடுத்தது? முறையான ரசிதுகள் இன்றி இவ்வாறு எடுத்துச் செல்வது எந்த விதியின் கீழ்? முறையான பெர்மிட், இன்சூரன்ஸ் உள்ளதா? இதற்கெல்லாம் விடை கிடைக்காது. புரையோடிப் போயிருக்கும் ஊழல் சமாச்சாரங்களில் இதுவும் ஒன்றாக கலந்துவிட்டது.

 வெளிநாடுகளில் எப்படி?

 மலேசியாவில் கடைப்பிடிக்கப்படும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அங்கு வசிக்கும் தஞ்சையைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எழில்மணி கூறியது:

 மலேசியாவில் வாகன விதிகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகின்றன. இடது, வலது புறம் என்பது ஒவ்வொரு வாகனத்துக்கும் வேகத்துக்கு ஏற்ப அனுமதிக்கப்படுகிறது. இதனை ஒழுங்குடன் கடைப்பிடிக்கின்றனர்.

 யார் பார்க்கப்போகிறார்கள் என்று நினைக்காமல் சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளுக்கு ஏற்ப வாகனம் ஓட்டுகின்றனர்.

 மேலும் சாலை விதிகளை மீறுபவர்களை கேமராவில் பதிவு செய்வது, தண்டனை, அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வாகனத்தை சாலை ஓரத்தில் தேவையின்றி நிறுத்தினால் ரூ.4,500 அபராதம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 மேலும் போக்குவரத்து விதிகள், விபத்துகள் ஏற்படும் அபாயம் குறித்து தொலைக்காட்சி, வானொலிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒலிபரப்பப்படுகின்றன.

 இதேபோல் நம் ஊரிலும் போதிய விழிப்புணர்வு, விதிகளை மீறுவோர்களுக்கு அபராதம், தண்டனை, முறையான சாலை பராமரிப்பு என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் விபத்துகளை குறைக்க முடியும் என்றார் எழில்மணி.

 தொடரும் விபத்துகள் குறித்து அவ்வப்போது பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பதை விட இதனை தடுப்பதற்கான அனைத்து விஷயங்கள் குறித்தும் பொறியாளர்கள், போக்குவரத்து போலீஸôர், வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், டிரைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து பரிந்துரைகள் பெறப்பட வேண்டும்.

 அதனை அரசு தீவிரமாக பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →