தமிழ்நாடு

கோவையில் திமுக பொதுக்குழு: ஜூலை 29-ம் தேதி நடக்கிறது?

கோவை, ஜூன் 17: திமுக பொதுக்குழு கோவையில் ஜூலை 29-ம் தேதி கூட உள்ளதாகத் திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் பொதுக்குழு என்பதால், இக் கூட்டம் மிகவும் முக்

சிவ. மணிகண்டன்

கோவை, ஜூன் 17: திமுக பொதுக்குழு கோவையில் ஜூலை 29-ம் தேதி கூட உள்ளதாகத் திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் பொதுக்குழு என்பதால், இக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சென்னையில் அண்மையில் நடந்த திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் முக்கிய முடிவுகள் எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை.

"உயர்நிலை செயல்திட்டக் குழு என்பது கட்சியின் அன்றாட நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கும் ஒரு குழுதான். பொதுக் குழுவில்தான் கட்சி உடன்பாடுகள், தோழமைக் கட்சிகளைக் குறித்த கருத்துக்கள் தெரிவிப்பது வழக்கம்' என்று திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொதுக்குழுவை கோவையில் நடத்துவது என கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

திமுக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் கட்சிக்குப் புத்துயிரூட்ட வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தை ஜூன் 19-ல் கோவையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துப் பேசுகிறார். அடுத்ததாக, கட்சியின் பொதுக்குழு கூட்டமும், செப்டம்பரில் திமுக முப்பெரும் விழாவையும் கோவையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கோவையை மையப்படுத்தி அடுத்தடுத்த செயல்பாடுகளை நடத்துவதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர் கட்சி நிர்வாகிகள். 2001 முதல் பேரவைத் தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் திமுக கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. 2011 பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை தமிழகம் முழுவதும் அலை இருந்தாலும், கட்சி மேற்கொண்ட சில தவறான முடிவுகளால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கூட பிடிக்க முடியாமல் போனது என்கின்றனர்.

குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று மாவட்டச் செயலர்கள் கட்சித் தலைமைக்குத் தகவல் எடுத்துச் சென்றனர். அதன் விளைவு, கவுண்டர் அல்லாத பிற சமூகத்தினருக்கு திமுகவின் மீது ஒருவித அதிருப்தி ஏற்பட்டது. அதே வேளையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பதா என்ற கேள்வி திமுகவினரிடம் கூட அப்போது எழுந்தது. இதனால், தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

1977-க்குப் பிறகு திமுகவில் கோவை மாவட்டத்தில் மு.கண்ணப்பன், சாதிக் பாட்ஷா, பொங்கலூர் நா.பழனிசாமி ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாக இருந்துள்ளனர்.ஆனால், அதிமுகவில், செ.அரங்கநாயகத்தில் ஆரம்பித்து, தற்போதைய எஸ்.பி.வேலுமணி வரை அமைச்சர்கள் என நீண்ட பட்டியலே இருக்கிறது.

"திமுகவில் இப்போதைய சூழலில் கோவை மாவட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. இப்போதுள்ள சூழலில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை தலைமை மேற்கொள்ள வேண்டும். கோவையில் நடக்க உள்ள அடுத்தடுத்த நிகழ்வுகள் அப்படிப்பட்ட நடவடிக்கையாகவே கருதுகிறோம்' என்று கூறுகின்றனர் திமுகவினர். பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பர். அதற்கேற்ற அரங்கு கொடிசியா தொழிற்காட்சி வளாகம் மட்டுமே. அதை அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வழங்குவதில்லை. ஆகவே, திறந்தவெளி மைதானத்தைத் தேர்வு செய்து அதில் அரங்கம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தத் தேதி? பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 29-ம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT