முகப்பு
தமிழ்நாடு

ஊழியர்கள் பள்ளி, பட்டப்படிப்பு படிக்க 5 ஆண்டு அவகாசம்: டி.என்.பி.எஸ்.சி. கோரிக்கையை நிராகரித்தது அரசு

சென்னை, ஜூன் 23: பள்ளிப் படிப்பை படிக்காமல் பட்டம் பெற்ற அரசு ஊழியர்கள் உரிய முறையில் பட்டங்களைப் பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கோர

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:57 PM
பகிர்:

சென்னை, ஜூன் 23: பள்ளிப் படிப்பை படிக்காமல் பட்டம் பெற்ற அரசு ஊழியர்கள் உரிய முறையில் பட்டங்களைப் பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது.

 இதுகுறித்த உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ளார்.

 பள்ளி இறுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு), மேல்நிலைக் கல்வித் தேர்வு (பிளஸ் டூ) ஆகியன தேர்ச்சி பெற்ற பின் திறந்த நிலை பல்கலைக்கழகங்களின் மூலமாக பெறப்படும் பட்டயம், பட்டம், முதுகலைப் பட்டங்களை மட்டுமே பொதுப்பணிகளில் நியமனம், பதவி உயர்வு பெற அங்கீகரித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

 இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள் உள்பட தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பெறும் பட்டங்கள் பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் ஏற்றுக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மட்டும் பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பெறும் பட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவற்றைப் பெற்றுள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 அரசுக்கு கோரிக்கை: பள்ளிப் படிப்பை முடிக்காதோருக்கு பதவி உயர்வுகள் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக அமையும் எனவும் தமிழக அரசு கூறி வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்து கடிதம் எழுதியது.

 ""தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அவர்கள் பொருட்டு கல்வித் தகுதி அல்லது பணித் தகுதியை தளர்த்துவது எனவும், கல்வித் தகுதியைப் பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும்'' எனக் கூறியிருந்தது.

 அதாவது, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்க இரண்டு ஆண்டுகள், பட்டப் படிப்பு படிக்க மூன்று ஆண்டுகள் என ஐந்தாண்டுகள் அவகாசம் கோரி இருந்தது. பணி புரிந்து கொண்டே அவர்கள் இந்தப் படிப்பைப் படிக்க வகை செய்யுமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

 தமிழக அரசு மறுப்பு: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்தக் கோரிக்கை குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆய்வு செய்து உத்தரவிட்டுள்ளது. துறையின் முதன்மைச் செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள உத்தரவு:

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் துணைச் செயலாளர், சார்புச் செயலாளர், பிரிவு அலுவலர் ஆகிய பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பிட போதிய தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாத நிலையில், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நிரப்ப அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்கு முறைகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி, தலைமைச் செயலக ஊழியர்கள் மூலம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிடலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக கல்வித் தகுதியைத் தளர்த்தினால் அதுபோன்ற கோரிக்கைகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களிடம் இருந்தும் பெறப்படும் சூழல் உருவாகும்.

 மேலும், இது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு எதிராக அமைந்து விடும். இது தொடர்பாக, தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறப்பட்டது.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரின் கருத்து அரசினால் நன்கு பரிசீலிக்கப்பட்டது. ஐந்தாண்டுகள் கால அவகாசம் அளிக்கக் கோரும் அவரது கோரிக்கையை ஏற்க இயலாது என்று உத்தரவிட்டுள்ளார்.

 கேள்விக் குறி: பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்ற பலருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பதவி உயர்வு அளிப்பது நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அமையும் என அரசு கருத்து தெரிவித்துள்ளது.

 பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்களைப் பெற்ற தேர்வாணைய ஊழியர்களில் சிலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு காரணமாக, பதவி உயர்வு பெற்றவர்கள் அதிலிருந்து இறக்கப்படுவார்களா அல்லது அதே பதவியில் தொடர்வார்களா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.