முகப்பு
தமிழ்நாடு

ஆங்கிலேயர் காலத்திய "டாட்டன் ஹாம்' முறை ஒழிப்பு: கோப்புகளைக் கையாள மின் ஆளுமை வழி

சென்னை, ஜூன் 25: கோப்புகள், தபால்களை கையாள தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறைகளில் நடைமுறையில் உள்ள 150 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான "டாட்டன் ஹாம்' முறையை ஒழிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  மின்

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:58 PM
பகிர்:

சென்னை, ஜூன் 25: கோப்புகள், தபால்களை கையாள தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறைகளில் நடைமுறையில் உள்ள 150 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான "டாட்டன் ஹாம்' முறையை ஒழிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 மின் ஆளுமை மூலம் கோப்புகள், தபால்களை கையாள்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மின் ஆளுமை முறை அமல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் கேட்கும் தகவல்கள், சலுகைகள் உள்ளிட்டவை விரைந்து கிடைப்பதற்கு வழி ஏற்படும்.

 தலைமைச் செயலகம் போன்ற அரசின் முக்கிய இடங்களுக்கு தபால்களை பொது மக்கள் அனுப்புவார்கள். இந்தத் தபால் அரசு அலுவலகங்களுக்கு வரும். தபால் பிரிவில் தபால் கிடைத்ததற்கான தேதியுடன், அதற்கென பிரத்யேக எண் தரப்படும். இதன்பின், சம்பந்தப்பட்ட துறையின் பிரிவுக்கு அந்தத் தபால் அனுப்பி வைக்கப்படும்.

 கோப்புகள் தயாரித்து பதில் அளிக்க... தபால் மூலமாக பொது மக்கள் கேட்கும் தகவல்கள், விவரங்கள் உள்ளிட்டவை அரசுத் துறைகளில் கோப்புகளாகத் தயாரிக்கப்படும். அந்தக் கோப்புகள் துறைத் தலைவர் அல்லது செயலாளர் மூலமாக உரிய முறைகளில் திருத்தம் செய்யப்படுவது வழக்கம். சில தகவல்களை அளிக்க அரசுத் துறைகள் மாதங்கள் அல்லது ஆண்டுக் கணக்கில் காலம் எடுத்துக் கொள்வது உண்டு.

 துறைத் தலைவரிடம் இருந்து திருத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட கோப்புகள் தகவல்கள் என்ற முறையில் மாற்றப்பட்டு மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டு வாரியாக கோப்புகள் சேகரித்து வைப்பது வழக்கம். இவ்வாறு பதிலளிக்கும் முறை ஆங்கிலேயர் காலத்திய வழக்கமாக இருந்தது.

 அதாவது, "கேட்டுக் கொள்ளப்படுகிறார், பணிக்கப்படுகிறார், எடுத்துக் கொள்ளலாம்' என்ற வாசகங்களைப் போட்டு கோப்புகளை தயார் செய்வது. ஒரு அடிமை முறை போன்று வார்த்தைகளை பிரயோகிப்பது ஆங்கிலேயர் காலத்திய நிலையாக இருந்தது. இதற்கு "டாட்டன் ஹாம்' முறை என்று பெயர்.

 மின் ஆளுமை முறை: இந்த டாட்டன் ஹாம் முறையை ஒழித்து, மின் ஆளுமையின் அடிப்படையில் புதிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை அளித்துள்ளது.

 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையில் போதுமான திருத்தங்களைக் கொண்டு வர உரிய பரிந்துரைகளை வழங்க ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் முக்கிய பரிந்துரையாக விளங்குவது, "டாட்டன் ஹாம்' முறை திருத்தப்பட வேண்டும் என்பதாகும்.

 அரசு உத்தரவு: ராஜன் குழு பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் ம.குற்றாலிங்கம் இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்விவரம்:

 டாட்டன் ஹாம் முறை திருத்தி அமைக்கப்பட வேண்டும் எனவும், மின் ஆளுமையின் அடிப்படையில் புதிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையின் மீது மேல் நடவடிக்கையைத் தொடர ஏதுவாக, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளரைத் தலைவராகவும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், வருவாய்த் துறை நிர்வாக ஆணையாளர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறது என தனது உத்தரவில் கூறியுள்ளார்.

 மின் ஆளுமை முறை கொண்டு வரப்படுவதால், அரசுத் துறைகளிடம் மக்கள் கேட்கும் தகவல்கள் விரைவில் அவர்களுக்குச் சென்றடையும். தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். இணையதளம் வழியே மின்னஞ்சல் மூலமாகவும் மக்கள் தகவல்களைப் பெற வழி ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.