முகப்பு
தமிழ்நாடு

என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை

வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:22 PM
பகிர்:

வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

 - ஆசிரியர்.

 ட்டப் பேரவை முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் வரை அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னைதான் முக்கிய விவாதப் பொருள். இதனால் பொதுமக்கள் அனுபவித்த, அனுபவித்து வரும் தொல்லைகள் ஏராளம். தொழில் துறையும், அதனால் பயனடைந்து வரும் லட்சக்கணக்கானோரின் வேலைகளும் பறிபோகும் அவலம். ஆம்..அந்தப் பிரச்னை மின்வெட்டு தான்.

 2007-ம் ஆண்டுக்கு முன்பு வரை மின்சார பற்றாக்குறை என்பது பெரிய அளவில் இல்லை. 2007-க்குப் பிறகு பெரிய அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் இயங்கத் தொடங்கின. தமிழகத்தின் இப்போதைய மின்சாரத் தேவையின் அளவு 11 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது.

 வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோடையில் சிறிது மின்தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக மின்தட்டுப்பாடும், அதனால் மின்வெட்டும் ஏற்படுவது பழகிப்போன ஒன்றாகி விட்டது. பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 7 ஆயிரத்து 500 மெகா வாட்டாக உள்ளது. அதாவது, தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி 3 ஆயிரம் மெகா வாட். இதுவே மின்பற்றாக்குறையின் அளவாகும்.

 இந்த மின்வெட்டைச் சமாளிக்க சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினசரி இரண்டு மணி நேர மின்வெட்டும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு 30 சதவீத மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தின் மூலம் இயந்திரங்களை இயக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. மாவட்டங்களில் வழக்கமாக செய்யப்படும் மூன்று மணி நேர மின்வெட்டுடன் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு நாளொன்றுக்கு 11 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது.

 பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களைத் தவிர்த்து, பஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளால் 50 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெற்று வந்தன. இப்போது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

 இப்போது கோடைக்காலம் என்பதால், மின்வெட்டின் அளவு மேலும் தீவிரமாகி உள்ளது. சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின்வெட்டு அமலில் உள்ளது.

 வீட்டு உபயோகத்துக்கான மின் பயனீட்டாளர்கள் என்ற அளவில் தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் வரவு அதிகரித்து இருக்க, மற்றொருபுறம் வீட்டு உபயோகத்துக்கான மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

 என்ன செய்யலாம்: 1997-ம் ஆண்டில் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை ஜெனேரேட்டர்கள் மூலம் தயாரித்துக் கொண்டன. அப்போது, ஒரு லிட்டர் டீசலின் விலை 20 ரூபாய்க்குள் இருந்தது. இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 35 ரூபாயைத் தாண்டி விற்கிறது. இந்தச் சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களால் ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய முடியாது. ஆனால், ஜெனேரேட்டர் மூலம் தயாராகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.7 என்ற அளவில் அரசு தர வேண்டும் என தொழில் நிறுவனங்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.

 இந்தச் சூழ்நிலையில், ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய ஆகும் செலவு, தமிழ்நாடு மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். எனவே, தொழில் நிறுவனங்கள் ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய முன்வரவில்லை.

 தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின்வெட்டில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது என்பதே தொழில் நிறுவனங்கள் மத்தியில் உள்ள கோரிக்கையாகும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தது, மானிய விலையில் மின்சாரம் வழங்குவது போன்றவற்றுக்காக மட்டுமே கடந்த மூன்றாண்டுகளில் தமிழக மின்வாரியம் செலவிட்ட தொகை ரூ.18 ஆயிரம் கோடியைத் தாண்டும்.

 குஜராத் போன்ற மாநிலங்களில் ஒரு ஆண்டுக்குத் தேவையான மின்சாரத்தை மொத்தமாக வெளி மாநிலங்களில் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் தேவையும், தட்டுப்பாடும் ஏற்படும்போது மட்டுமே வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற முயற்சி நடக்கிறது. அப்போதை சூழலில், வெளி மாநிலங்களில் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.14 வரை விற்கப்படுகிறது.

 மாநிலத்தில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. அந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்து அவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்.

 உடனடி தேவை: 2001-2006 வரையில் அதிமுக ஆட்சியில் எந்த மின் உற்பத்தித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக எந்த மின் திட்டங்களையும் தொடங்கவில்லை. 2007-ம் ஆண்டுக்குப் பிறகே மின் உற்பத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களைத் தொடங்கி இருந்தால் இப்போது மின்வெட்டு என்ற பேச்சுக்கு இடம் இருந்து இருக்காது.

 எனவே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுமார் 10 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அரசு வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மின் தட்டுப்பாட்டின் அளவு 2,500 மெகாவாட் என மின்வாரியம் கூறினாலும் ஆண்டுக்கு 1000 முதல் 1,500 மெகாவாட் அளவுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளின் தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் நிச்சயம் இருக்கும் என மின்வாரிய அதிகாரிகளே சுட்டிக் காட்டுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், குறுகியகால மற்றும் நீண்ட கால திட்டங்களை மனதில் வைத்து அரசு செயல்படுவது அவசியம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 காற்றாலைகள் மூலம் தமிழகத்துக்கு 4,500 முதல் 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கிறது. கோடையில் இதன் அளவு குறைந்து விடுகிறது. சர்க்கரை ஆலை போன்ற இணை மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 300 முதல் 400 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. அவற்றின் மின் உற்பத்தித் திறனையும், அதில் புதிய திட்டங்களையும் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவில் மகாராஷ்டிரம் உட்பட ஒன்பது மாநிலங்களில் கடுமையான மின்தட்டுப்பாடு இருந்தும் எந்த மாநிலத்திலும் தொழில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் தொழில் உற்பத்தியும், அதனால் மக்களுக்கு கடுமையான பாதிப்பும் ஏற்பட்டுள்ளன. இது சீர்செய்யப்பட வேண்டும்.

 மின்உற்பத்திக்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை. மனிதத் திறமைக்கும், தடையில்லாத மின்சாரத்தையும் நம்பியே மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் வந்தன. ஆனால், இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. மின் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி சீராகி இருக்கும். ஆனால், தொழில் துறையும், தொழில் வளமும், மக்களும் காணாமல் போய் இருப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.