திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம்
சென்னை, மே 14: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அந்தத் தேர்வை எழுதிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் அச்சத்தில் உற
சென்னை, மே 14: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அந்தத் தேர்வை எழுதிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77 ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது.
10 லட்சம் பேர்: வி.ஏ.ஓ. தேர்வை தமிழம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டுகளில் தேர்வு நடத்தப்பட்ட மாதத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி முன்பே அறிவிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களை நெருங்கும் நிலையில் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
என்ன நடக்கிறது? அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து அனுப்பும் தேர்வாணையத்திலேயே பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாகவே வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவைகளும், விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.
விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, வினாத்தாளின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. போதுமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணியாளர்கள் நியமிக்கப்பட்டும்... தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதற்கு வசதியாகப் புதிய பணியிடங்கள் உருவாக்கப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அனுமதி அளித்து அந்தப் பணியிடங்களில் தேவையான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக தேர்தல் அறிக்கையில்... சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் வி.ஏ.ஓ. தேர்வு குறித்து பிரதானமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் 25-வது பக்கத்தில், "கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் உட்பட வெளியிடப்படாமல் உள்ள அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட உத்தரவிடப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியாக அதை நிறைவேற்ற வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் பிடியில் 800 வி.ஏ.ஓ.க்கள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் வரை கணக்கிடப்பட்டதன் அடிப்படையில் 3 ஆயிரத்து 484 வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்கள் உள்ளன. அதன்படி, அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதனிடையே, இரண்டு ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சுமார் 800-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.
இந்தக் காலகட்டங்களில் அவர்கள் பணி செய்ய முடியாது. பிழைப்பூதியம் என்ற அளவில் அவர்களுக்கு சிறு தொகை வழங்கப்படும். இதன்படி, தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன.