கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயரும்?
சென்னை, மே 17: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை விரைவில் ரூ. 50 வரை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் இப்போது 12.30 கோடி சமையல் வாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
சென்னை, மே 17: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை விரைவில் ரூ. 50 வரை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் இப்போது 12.30 கோடி சமையல் வாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மண்ணெண்ணெய் பயன்பாட்டை முழுவதுமாக குறைக்கவும், சூழல் பாதுகாப்பு கருதியும், வரும் 2016-ம் ஆண்டுக்குள் சமையல் கேஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 16 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் இன்டேன் நிறுவனம் நியமித்துள்ள 670 முகவர்கள் மூலம் 1.25 கோடி பேருக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாரத் கேஸ் நிறுவனத்தின் 150 முகவர்கள் மூலம் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் எண்ணூர், மணலி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, மன்னார்குடி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையங்களில் இருந்து தமிழகத்தில் மாதந்தோறும் அதிகபட்சமாக 50 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதில் சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான, கேஸ் சிலிண்டர் விலை ரூ. 352 (14.2 கிலோ) ஆக உள்ளது. உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தகப் பயன்பாட்டுóககான சிலிண்டர் விலை ரூ. 1,288 (19 கிலோ) ஆக உள்ளது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் பதற்றம், யூரோவுக்கு எதிராக அமெரிக்கா டாலரின் மதிப்பில் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து கேஸ் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய இன்டேன் முகவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.எஸ். ஜெகதீசன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கேஸ் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க தில்லியில் மே 19, 20 ஆகிய தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தலைமையிலான உயர் நிலைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 வரை உயர்த்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் மானிய விலையில் 4 அல்லது 6 சிலிண்டர்களை மட்டுமே விநியோகிக்கவும், தேவைப்பட்டால் வெளிசந்தையில் கூடுதல் விலைக்கு தாராளமாக கேஸ் சிலிண்டர்களை வழங்கவும் அரசு ஏற்கெனவே பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டம் குறித்து உயர் நிலைக் குழு கூட்டம் ஆய்வு செய்ய உள்ளது என்றார்.
ஊழியர்கள் பற்றாக்குறை: தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் காரணமாக, பகலில் வீடுகளுக்கு சிலிண்டர்களை எடுத்துச் சென்று விநியோகிக்கும் பணிக்கு ஊழியர்கள் முன்வர தயங்கும் நிலை உள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆள்கள் பற்றாக்குறையால் சிலிண்டர் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
20 கிலோ மீட்டர் தூரத்துóக்கு மேல் சிலிண்டர்களை எடுத்துச் சென்று விநியோகிக்க, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கிலோ மீட்டருக்கு ரூ. 1.40 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகங்கள் அனுமதித்துள்ளன.
அரசின் இலவச சமையல் கேஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட கேஸ் இணைப்பை மற்றவர்களுக்கு விற்று, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இன்டேன் நிர்வாகத்துக்கு புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, கூப்பன் முறையில் சிலிண்டர் விநியோகிப்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
சிலிண்டருக்கு பதிவு செய்ய... சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கேஸ் சிலிண்டர்களைப் பெற, 24 மணி நேர தானியங்கி செல்போன் எண் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள எண்களுக்கு செல் போனில் பதிவு செய்தால் உடனடியாக ஒப்புகை பதிலாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. எனினும், சாதாரண மக்கள் அந்தந்த முகவர்களை அணுகினால் செல்போனில் முன்பதிவு செய்ய உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியால் கேஸ் விநியோகத்தில் முறைகேடு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.