முகப்பு
தமிழ்நாடு

"கல்லூரி' என பெயர் வைத்துக் கொள்ளும் தனியார் பட்டயக் கல்வி நிறுவனங்கள்

சென்னை, நவ. 16: பட்டயக் கல்வி மட்டும் வழங்கும் சில தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களுடைய நிறுவனப் பெயருடன் "கல்லூரி' என்ற பெயரை இணைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுவதாகக் கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றன

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:58 AM
பகிர்:

சென்னை, நவ. 16: பட்டயக் கல்வி மட்டும் வழங்கும் சில தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களுடைய நிறுவனப் பெயருடன் "கல்லூரி' என்ற பெயரை இணைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுவதாகக் கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நல்ல வருமானம் தரும் துறையாக கல்வித் துறை மாறிய பின்னர், தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுபோல், தனியார் பட்டயக் கல்வி நிறுவனங்ளும் புற்றீசல்கள் போல் வரத் தொடங்கிவிட்டன.

இந்தத் தனியார் பட்டயக் கல்வி நிறுவனங்கள் ஊடகவியல், மல்டி மீடியா உள்ளிட்ட பல்வேறு முதுநிலை பட்டயப் படிப்புகளை வழங்கி வருகின்றன.

Advertisement

இந்தப் பட்டயக் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள் போல் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் புதிய வழிமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டும், நிகர்நிலைப் பல்கழகத்துடன் கூட்டு வைத்துள்ளதாகக் கூறிக் கொண்டும், பட்டயப் படிப்புகளுடன் இப்போது முதுநிலை பட்டப் படிப்புகளையும் வழங்கத் தொடங்கியுள்ளன.

இதன் மூலம், இதுவரை "இன்ஸ்டிட்யூட்' எனப் பெயர் வைத்து வந்த இந்தக் கல்வி நிறுவனங்கள், இப்போது "கல்லூரி' எனப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டுள்ளன. இதற்கு ஏற்றாற்போல் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளன.

"கல்லூரி' என்ற பெயர், படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு என்ற அறிவிப்பு, கட்டட வெளிப்புறத் தோற்றம் உள்ளிட்டவற்றால், மக்கள் ஏமாறுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிறுவனங்கள் "கல்லூரி' எனப் பெயர் வைத்துக் கொள்வது விதிமுறை மீறல் எனவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியது:

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2009 விதிமுறையின்படி, "கல்லூரி' என்பது பல்கலைக்கழகம் ஒன்றின் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் யுஜிசி-யின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் கல்லூரியில் பிளஸ்-2 படிப்புக்குப் பிறகான படிப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், அந்தப் படிப்புக்கான பட்டத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம்தான் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் யுஜிசி விதியின்படி, இளநிலை பட்டப் படிப்பு உள்ள கல்லூரியில்தான், முதுநிலை பட்டப் படிப்புக்கு அனுமதி அளிக்கப்படும். அதுபோல, முதுநிலை பட்டப் படிப்பு உள்ள கல்லூரிகளில்தான், எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

இந்த விதிமுறைகள் எதையுமே, தனியார் பட்டயக் கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. எனவே, இந்தக் கல்வி நிறுவனங்கள் "கல்லூரி' எனப் பெயர் வைத்துக் கொள்வதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

மேலும், இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அனுமதி பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைவு பெற்றுள்ளதா, அதில் வழங்கப்படும் பட்டயம், பட்டம், முதுநிலை பட்டப் படிப்புகள் இந்தியாவில் செல்லுபடியாகுமா, வேலைவாய்ப்புக்கு உகந்ததா என்பதை ஆராய்ந்த பின்னர்தான் சேர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.