வடமாநிலத்தவர் வேலூர் வர வரப்பிரசாதமாகும் "விவேக் எக்ஸ்பிரஸ்'
அரக்கோணம், நவ. 20: நாட்டிலேயே அதிக தூரம் செல்லும் ரயிலான திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காட்பாடி வழியாக செல்லவுள்ளது. இந்த ரயில் வேலூர் மாவட்டத்துக்கு வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு
அரக்கோணம், நவ. 20: நாட்டிலேயே அதிக தூரம் செல்லும் ரயிலான திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காட்பாடி வழியாக செல்லவுள்ளது.
இந்த ரயில் வேலூர் மாவட்டத்துக்கு வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ரயில்தான் உலகிலேயே 8ஆவது அதிக தூரம் செல்லும் ரயிலாகும்.
நாட்டிலேயே அதிக தூரத்துக்கு (4,286 கி.மீ. தூரம்) கடந்து செல்லும் வகையில், புதிய ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் இந்த ரயில் அறிமுக ஓட்டமாய் கடந்த 19ஆம் தேதி (சனிக்கிழமை) திப்ருகரில் தொடங்கி வைக்கப்பட்டது.
26ஆம் தேதி முதல் பயணிக்கலாம்! இருப்பினும், இந்த ரயிலில் பயணிகள் இம்மாதம் 26ஆம் தேதி முதல் பயணிக்கலாம். இந்த ரயிலால் தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்கு மாநிலமான அசாமின் கடைகோடி மாவட்டமான தீமாஜி உள்ளிட்ட மாவட்டங்களாடு இணைக்கப்பட்டுள்ளது.
திப்ருகரில் இருந்து சனிக்கிழமை இரவு 11.45-க்கு புறப்பட்டு கெüஹாத்தி, நியுபொங்கைகான், நியுஜல்பைகுரி, அசான்சால், கட்டாக், புவனேஸ்வர், பூரி, குர்தாரோட், பிரம்மாபூர், விஜயநகரம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ரேணிகுண்டா உள்ளிட்ட நகரங்களின் வழியாக காட்பாடிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை மாலை 4.10க்கு வருகிறது.
தொடர்மார்க்கத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரியை புதன்கிழமை காலை 10.25-க்கு அடைகிறது. மறுமார்க்த்தில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் காட்பாடிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.15க்கு வருகிறது. தொடர் மார்க்கத்தில் புதன்கிழமை காலை 3.30க்கு திப்ருக்கரை சென்று அடைகிறது.
வடமாநிலத்தவர் வேலூருக்கு வர நேரடி ரயில்! வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வேலூர் உள்ள வரும் நோயாளிகள், பக்தர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு இது பெரிதும் பயன் அளிக்கும்.
இந்த ரயிலில் திப்ருகரில் இருந்து காட்பாடிக்கு படுக்கை வசதி கட்டணம் ரூ285, 3 அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதிக்கான கட்டணம் ரூ.1,457.
கன்னியாகுமரியில் இருந்து திப்ருகர் செல்ல மொத்த பயண நேரம் 85 மணி நேரம்.
அதிக தூரம் செல்லும் ரயில்! இதுநாள்வரை நாட்டிலேயே அதிக தூரம் சென்று வந்த ரயிலான ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் 3715 கி.மீ. தூரத்தை கடந்து சென்றது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ரயில் 4,286 கி.மீ. கடந்து செல்கிறது.
இதோடு, உலகிலேயே 8ஆவது அதிக தூரம் செல்லும் ரயில் என்ற பெருமையை விவேக் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.
அறிமுக ஓட்டமாய் வடகிழக்கு மாநில அபிவிருத்திக்கான மத்திய அமைச்சர் பூபன்சிங்கண்டாவாரால் சனிக்கிழமை கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை மாலை 4.10க்கு காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
சென்னைக்கு செல்லாது! இந்த ரயில் கூடுரில் இருந்து ரேணிகுண்டா, அரக்கோணம் பைபாஸ் வழியே காட்பாடிக்கு வருகிறது. மறுமார்க்கத்திலும் அரக்கோணம் பைபாஸ் ரேணிகுண்டா, கூடுர் வழியே செல்கிறது. இந்த ரயில் சென்னை செல்லாது. எனவே, வட மாநிலத்தவர்கள் வேலூருக்கு வர சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை.
சுவாமி விவேகானந்தரின் நினைவாக..
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழா 2013ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, விவேகானந்தரின் பெயரில் "விவேக் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படும் என முன்பு அறிவித்திருந்தார். இதன்படி, இந்த ரயில் இயக்கப்படுகிறது.